Last Updated : 08 Jun, 2024 05:26 AM

 

Published : 08 Jun 2024 05:26 AM
Last Updated : 08 Jun 2024 05:26 AM

2024 மக்களவை தேர்தலில் 73 பெண்களுக்கு வெற்றி: 2019 தேர்தலை விட எண்ணிக்கை குறைந்தது

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல்களில் பெண் வேட்பாளர்கள் எண்ணிக்கை 2009-ல் 7% ஆகவும், 2014-ல் 8%ஆகவும் இருந்தது. இது 2024-ல்9.5% ஆக உயர்ந்தது. இந்த தேர்தலில் போட்டியிட்ட 8,337 வேட்பாளர்களில் 797 பெண்கள் இடம் பெற்றிருந்தனர். தமிழ்நாட்டின் நாம் தமிழர் கட்சி மட்டுமே பெண்களுக்கு சம வாய்ப்பு அளித்தது.

இதன் 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண்கள் ஆவார். மற்ற அனைத்து கட்சிகளிலும் இதற்கு அடுத்த நிலையில் 33 சதவீதம் மற்றும் அதற்கு குறைவாகவே பெண் வேட்பாளர்கள் இருந்தனர்.

பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் மசோதா நிறைவேறிய பிறகு நடைபெற்ற முதல் மக்களைவைத் தேர்தல் இது. இதனால் பெண்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஜுன் 4-ல் வெளியான முடிவுகளில் 73 பெண்கள் மட்டுமே எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் பாஜக சார்பில் மிக அதிகமாக 30 பெண்கள் எம்.பி. ஆகியுள்ளனர்.

பிற கட்சிகளில் காங்கிரஸ் 14, திரிணமூல் 11, சமாஜ்வாதி 4,திமுக 4, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் லோக் ஜன சக்தி தலா 2 எனபெண் எம்.பி.க்கள் தேர்வாகினர்.

இந்தமுறை எம்.பி. ஆன பெண்களில் பாஜகவின் ஹேமமாலினி, திரிணமூல் கட்சியின் மஹுவா மொய்த்ரா, சமாஜ்வாதியின் டிம்பிள் யாதவ், தேசியவாத காங்கிரஸின் சுப்ரிய சுலே ஆகியோர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய 73 எம்.பி.க்களில் இளம் வயதினராக சமாஜ்வாதியின் பிரியா சரோஜ் (25), இக்ரா சவுத்ரி (29) உள்ளனர். உ.பி.யில் 2019 தேர்தலுக்குப் பிறகு 11 பெண் எம்.பி.க்கள் இருந்தனர். இப்போது 8 பேர் மட்டுமே உள்ளனர்.

முஸ்லிம்கள்: இதேபோல் இம்முறை எம்.பி.ஆனவர்களில் முஸ்லிம்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. 2019 தேர்தலில் 115 முஸ்லிம்கள் போட்டியிட்டனர். இது இந்த தேர்தலில் 78 ஆக குறைந்தது. கடந்த 2019 தேர்தலுக்குப் பிறகு 26 முஸ்லிம் எம்.பி.க்கள் பல்வேறு கட்சிகளில் இருந்தனர். இந்த எண்ணிக்கை இம்முறை 24 ஆக குறைந்து விட்டது. 2014 தேர்தலுக்கு பிறகும் இதே 24 முஸ்லிம் எம்.பி.க்கள் இருந்தனர்.

2024-ல் தேர்வான 24 முஸ்லிம்களில் காங்கிரஸ் 7, சமாஜ்வாதி 4, திரிணமூல் 5, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் 3, ஜம்மு-காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சி 2 மற்றும் ஏஐஎம்ஐஎம் சார்பில் அதன் தலைவர் அசதுத்தீன் ஒவைசி ஆகியோர் எம்பியாகி உள்ளர்.

சுயேச்சை வேட்பாளர்களில் 2 முஸ்லிம்கள் எம்.பி. ஆகியுள்ளனர். லடாக் மற்றும் காஷ்மீரின் பாராமுலாவில் இருந்து இவர்கள் மக்களவைக்கு செல்கின்றனர். இத்தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மிக அதிகமாக 35 முஸ்லிம்களுக்கு வாய்ப்பளித்தபோதும் ஒருவர் கூட வெற்றி பெறவில்லை. பாஜகவின் ஒரே முஸ்லிம் வேட்பாளராக கேரளாவின் மலப்புரத்தில் போட்டியிட்டவர் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x