Published : 08 Jun 2024 05:08 AM
Last Updated : 08 Jun 2024 05:08 AM
புதுடெல்லி: மத்தியில் அடுத்த அரசை அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன்பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களை மட்டுமே பெற்றுள்ள போதிலும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து 293 இடங்களை பெற்றுள்ளது. இந்நிலையில் என்டிஏ நாடாளுமன்ற கட்சி தலைவராக பிரதமர் மோடி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து, மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்கு முன் பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு எல்.கே.அத்வானியை சந்தித்து அவரது ஆசிகளைப் பெற்றார்.
பிறகு கட்சியின் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தையும் பிரதமர் மோடி அவர்களது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1980-ல் பாஜக தொடங்கியதில் இருந்து அக்கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் எல்.கே.அத்வானி. 1990-களில் பாஜகவை எழுச்சி பெறச் செய்ததில் அத்வானி முக்கியப் பங்காற்றியவர். பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசில் துணை பிரதமராக பதவி வகித்த எல்.கே.அத்வானிக்கு கடந்த பிப்ரவரியில் நாட்டின் மிகஉயரிய விருதான பாரத ரத்னாவிருது வழங்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
மூன்றாவது முறை மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்க வருமாறு நாடாளுமன்ற புதிய கட்டிடமான சென்ட்ரல் விஸ்டா, நாட்டின் அதிவேக ரயிலான வந்தே பாரத் திட்டத்தில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் பங்கேற்ற சுகாதார தொழிலாளர்கள், 3-ம் பாலினத்தவர், தொழிலாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அதேபோல் வந்தே பாரத், மெட்ரா ரயில் தயாரிப்பில் ஈடுபட்ட ரயில்வே ஊழியர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT