Published : 07 Jun 2024 10:47 PM
Last Updated : 07 Jun 2024 10:47 PM
புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்த தனது கணிப்பு தவறாகி விட்டதாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள அவர் கூறியதாவது: “நான் எனது மதிப்பீட்டை உங்கள் முன் வைத்தேன். என்னுடைய கணிப்பு எண்களின் அடிப்படையில் 20 சதவீதம் தவறாகிவிட்டது என்பதை கேமராவில் நான் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
பாஜகவுக்கு 300-க்கு அருகில் சீட்கள் கிடைக்கும் என்று நாங்கள் சொன்னோம். ஆனால் அவர்களுக்கு 240 தான் கிடைத்தது. ஆனால் பாஜக மீது மக்களுக்கு சிறிது கோபம் இருப்பதாக நான் முன்பே கூறியிருந்தேன். எனினும் நரேந்திர மோடிக்கு எதிராக பரவலான அதிருப்தி அலை இல்லை.
இப்போது வெளிப்படையாக நாங்கள் கூறியது தவறு என்று நிரூபணம் ஆகியிருக்கிறது. ஆனால் எண்ணிக்கையை தாண்டி நாங்கள் கூறியது எதுவும் தவறு அல்ல. காரணம் அவர்கள் 36 சதவீத வாக்குகளை பெற்றுள்ளனர். வாக்கு சதவீதம் வெறும் 0.7 சதவீதமே குறைந்துள்ளது.
ஒரு தேர்தல் வியூக நிபுணராக நான் எண்ணிக்கை குறித்து பேசியிருக்கக் கூடாது. இதுவரை நான் அப்படி பேசியதில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் தான், நான் எண்ணிக்கை அடிப்படையில் பேசி தவறு செய்துவிட்டேன். இனி எண்ணிக்கை குறித்து நான் பேசப் போவதில்லை.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின்போதும், இப்போது 2024 மக்களவைத் தேர்தலின்போதும் எண்ணிக்கையில் நான் தவறு செய்துவிட்டேன். எண்களை தவிர்த்துவிட்டு பார்த்தால், நான் சொன்னது அனைத்தும் சரியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன்” இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
முன்னதாக தேர்தல் வியூகரான பிரசாந்த் கிஷோர், இந்த முறை பாஜக பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் 2019 தேர்தல் பெற்ற இடங்களை பெறும் அல்லது அதைவிட கூடுதல் இடங்களில் பாஜக வெல்லும் என்று தெரிவித்து வந்தார்.
இதே போல ஆக்சிஸ் மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பாஜக கூட்டணி 350க்கு சீட்களுக்கு மேல் வென்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியிட்டன.
ஆனால், கடந்த ஜூன் 4-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணி 293 தொகுதிகளை மட்டுமே வென்றது. இதனைத் தொடர்ந்து டிவி விவாதம் ஒன்றில் ‘ஆக்சிஸ் மை இந்தியா’ முகமையின் தலைவர் பிரதீப் குப்தா கண்ணீர் விட்டு அழுதார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT