Published : 07 Jun 2024 06:24 PM
Last Updated : 07 Jun 2024 06:24 PM

சிக்கிம் மாநில முதல்வராக ஜூன் 10-ல் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு

தேர்தல் வெற்றியை அடுத்து ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யாவை சந்தித்த பிரேம் சிங் தமாங் ஆட்சி அமைப்பதற்கான உரிமையை கோரினார்.

கேங்க்டாக்: சிக்கிம் மாநில முதல்வராக பிரேம் சிங் தமாங் வரும் 10-ம் தேதி பதவி ஏற்பார் என அக்கட்சி அறிவித்துள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலோடு சிக்கிம் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 31 இடங்களில் வெற்றி பெற்று மிகப் பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. இதையடுத்து, சிக்கிம் முதல்வராக பிரேம் சிங் தமாங் வரும் 9ம் தேதி மீண்டும் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 9-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்க உள்ளதால் அதில் என்டிஏ ஆதரவு கட்சியான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் பிரேம் சிங் தமாங் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். எனவே, அவரது பதவியேற்பு விழா ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா (எஸ்கேஎம்) சட்டமன்றக் கட்சிக் கூட்டம், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லமான மின்டோக்காங்கில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்கேஎம் எம்எல்ஏக்கள், கட்சியின் ஆதரவை மோடிக்கு வழங்குவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினர்.

பின்னர் பேசிய பிரேம் சிங் தவாங், "மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்ற பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். நமது நாட்டின் வளர்ச்சி மற்றும் செழுமைக்காக சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கும். மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்க உள்ளார். அந்த விழாவில் நான் கலந்து கொள்ள உள்ளேன்" என்று தெரிவித்தார். மேலும், தனக்கும், எஸ்.கே.எம்-க்கும் மீண்டும் ஒருமுறை வாய்ப்பு அளித்த சிக்கிம் மக்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

பிரேம் சிங் தமாங் வரும் 8 ஆம் தேதி புதுடெல்லிக்குப் புறப்படுவார் என்று எஸ்கேஎம் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். "தமங் மற்றும் அவரது அமைச்சர்கள் குழு ஜூன் 10 ம் தேதி பால்ஜோர் மைதானத்தில் பதவியேற்பார்கள்" என்று கட்சியின் மற்றொரு தலைவர் கூறியுள்ளார். இந்த தேர்தலில், சிக்கிமில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதியில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா சார்பில் போட்டியிட்ட இந்திரா ஹாங் சுப்பா மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x