Published : 07 Jun 2024 05:38 PM
Last Updated : 07 Jun 2024 05:38 PM
புதுடெல்லி: நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அவர் (ராகுல் காந்தி) சந்தேகத்துக்கு இடமின்றி இந்த மக்களவை தேர்தல் வெற்றியின் நட்சத்திரம். அவர்தான் இந்த தேர்தலின் மேன் ஆஃப் த மேட்ச். அவரும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் நாடு முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்தனர். ஆனால், கார்கே மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார். அங்கு அவர் எதிர்க்கட்சியை வழிநடத்துகிறார். எனவே, ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக வேண்டும்.
இந்த தேர்தலின் மூலம் மக்கள் ஒரு செய்தியை தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். நமது ஜனநாயகத்தை தங்கள் இஷ்டம்போல் எடுத்துக் கொள்ள இந்திய வாக்காளர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்தத் தேர்தலின் மிக முக்கிய விஷயம் என்னவெனில், இது கூட்டணி அரசு. கூட்டணி ஆட்சியை பிரதமர் வழிநடத்துவார். எந்த முக்கிய முடிவுகளையும் எடுப்பதற்கு முன், அவர் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அரசாங்கத்தை நடத்துவதில் அதிகம் ஆலோசனை செய்து பழக்கமில்லாத நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு இது ஒரு சவாலாக இருக்கும்.
இந்தத் தேர்தலில் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருக்கிறோம் என்பது குறித்த அடிப்படை உணர்வு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இருக்கிறது. காங்கிரஸுக்கு 100 இடங்களுக்கு மேல் கிடைக்கும் என்றும், இண்டியா கூட்டணிக்கு 200 இடங்கள் கிடைக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்த்தோம். அதையே சொன்னோம்.
அதைப் போலவே, பாஜகவும் 200 அல்லது 200+ இடங்களுக்கு மேல் முன்னேறப் போவதில்லை என்பது அக்கட்சியின் தலைவர்களுக்குத் தெரிந்திருக்கும். இருந்தும், பிரதமரும், உள்துறை அமைச்சரும், மக்கள் தங்கள் பணத்தை பங்குச்சந்தையில் முதலீடு செய்யும்படி வெளிப்படையாக ஊக்குவித்தார்கள். இது சில நியாயமான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்" என தெரிவித்தார்.
கேரளாவின் திருவனந்தபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட 4-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார் சசி தரூர். இம்முறை அவர், மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரை 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT