Published : 07 Jun 2024 04:09 PM
Last Updated : 07 Jun 2024 04:09 PM
ஸ்ரீநகர்: பாஜக 370-400 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறி மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்திய கருத்துக் கணிப்பாளர்கள் தங்கள் செயலுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் தலைவர் ஸ்ரீநகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபரூக் அப்துல்லா, "மக்களவைத் தேர்தலில் மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதன்மூலம் நாட்டின் அரசியலமைப்பு காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த முறை எதிர்க்கட்சிகள் வலிமையுடன் இருக்கும். நான் நாடாளுமன்றத்தில் இருந்தபோது எதிர்க்கட்சி வரிசையில் இருந்த நாங்கள் பலவீனமாக இருந்தோம். எங்கள் பேச்சை யாரும் கேட்கவில்லை. சர்வாதிகாரம் இருந்தது. ஆனால் கடவுளுக்கு நன்றி. சர்வாதிகாரம் இப்போது முடிந்துவிட்டது.
மக்கள்தான் அதிகாரம் மிக்கவர்கள் என்பதை அவர்கள் காட்டி இருக்கிறார்கள். அது இந்த தேர்தலில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. மக்களுக்கு இருக்கும் வாக்களிக்கும் சக்தி, யாரையும் உருவாக்கக்கூடியது. அதேபோல், யாரையும் ஒன்றுமில்லாமல் செய்யக்கூடியது” என்றார். தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர், "அவர்கள் ஆட்சி அமைக்கட்டும், மற்றதை பிறகு பார்க்கலாம்" என குறிப்பிட்டார்.
புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெறுமா என்ற கேள்விக்கு, "என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நீங்கள் மீடியாவில் இருக்கிறீர்கள், நீங்களும் நானும் அடிக்கடி சந்திக்க முடியும். காத்திருப்போம். ஏன் அவசரப்படுகிறீர்கள்?" என்று ஃபரூக் அப்துல்லா கூறினார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்துப் பேசிய அவர், "பாஜகவுக்கு மிருகத்தனமான பெரும்பான்மை இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறின. பாஜகவுக்கு 370-400 இடங்கள் கிடைக்கும் என அவர்கள் கூறினார்கள். இந்த கருத்துக் கணிப்பாளர்கள் தங்கள் கடைகளை மூடிவிட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற கருத்துக் கணிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தியதற்காக இந்த கருத்துக்கணிப்பாளர்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT