Published : 07 Jun 2024 05:00 PM
Last Updated : 07 Jun 2024 05:00 PM

அரசியல் சாசனத்தை வணங்கிய மோடி முதல் தமிழக பாஜகவுக்கு ‘ஆறுதல்’ வரை: என்டிஏ கூட்டம் ஹைலைட்ஸ்

புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் இன்று நடந்தது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் அனைத்து தலைவர்கள், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்கள், மாநில முதல்வர்கள், பாஜக தலைவர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் கவனம் ஈர்த்தவை:

  • கூட்டத்துக்கு வந்ததுமே அரசியல் சாசன புத்தகத்தைத் தொட்டு நெற்றியில் வைத்து வணங்கிய பின்பே இருக்கையில் அமர்ந்தார் பிரதமர் மோடி.
  • மேடையில் பாஜக ஆட்சிக்கு ஆதரவளித்த 14 கட்சிகளில் 9 கட்சிகளின் தலைவர்களுக்கு இடமளிக்கப்பட்டது.
  • மேடையில் அப்னா தளம் தலைவர் அனுப்பிரியா படேல் மட்டுமெ ஒரே ஒரு பெண் தலைவராக இடம்பெற்றிருந்தார்.
  • மோடியை பிரதமர் பதவிக்கு முதலாவதாக முன்மொழிந்தார் ராஜ்நாத் சிங்
  • கூட்டம் தொடங்கியதும் அனைத்து தலைவர்களும் ‘மோடி, மோடி’ என முழக்கமிட்டனர்.
  • கூட்டம் முழுவதுமே சிரித்த முகமாக காட்சியளித்தார் மோடி. சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் இருவருடனும் சிரித்தவாறு பேசிக்கொண்டே இருந்தார்.
  • சந்திரபாபு நாயுடு தொடங்கி பவன் கல்யாண் வரை அனைவரும் மோடியைப் புகழ்ந்து பேசி கவனம் ஈர்த்தனர்.
  • தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் ஒருவித இறுக்கமான முகத்துடனே காணப்பட்டார். அவரின் கட்சி ஓர் இடத்தில் மட்டுமே வென்றது குறிப்பிடத்தக்கது.
  • மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் குமாரசாமி இரண்டு வினாடிகள் மட்டுமே பேசிவிட்டு அமர்ந்தார்.
  • லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வான் பேசி முடித்ததும், அவரை கட்டியணைத்து முத்தமிட்டார் மோடி.

> நிதிஷ் குமார் தனது பேச்சில் எதிர் கூட்டணியான இண்டியா கூட்டணியை கிண்டலடித்து பேச, மோடி உட்பட அவையில் இருந்த அனைவரும் சிரிப்பலையில் மூழ்கினர். நிதிஷ் தனது பேச்சில், "இந்த முறை ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றவர்கள் அடுத்த தேர்தலில் தோற்றுவிடுவார்கள். அதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர்கள் ஒருபோதும் நாட்டுக்காக உழைத்ததில்லை" என்று கிடைத்த கேப்பில் இண்டியா கூட்டணியை நக்கலடித்தார்.

  • நிதிஷ் குமார் பேசி முடித்ததும் மோடியின் பாதங்களை தொட்டு வணங்கினார்.
  • மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பேசுகையில், "சிவசேனாவும் பாரதிய ஜனதாவும் ஒரே மாதிரியான சித்தாந்தம் கொண்ட கட்சிகள். இவர்களது கூட்டணி பாலாசாஹேப் காலத்தில் உருவானது. இது ஃபெவிகால் ஒட்டியது போன்ற வலுவான கூட்டணி. இது உடையாது" என்றார்.
  • கூட்டத்தில் பேசிய அனைவரும் இந்தியில் பேச, தென்னிந்திய தலைவர்களான சந்திரபாபு நாயுடு, குமாரசாமி, பவன் கல்யாண் மூவரும் ஆங்கிலத்தில் பேசினர்.
  • தமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், அண்ணாமலை, எல்.முருகன், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன் முதலானோர் கலந்துகொண்டனர்.
  • ஓபிஎஸ், ஜி.கே.வாசன், டிடிவி தினகரன், ஜான் பாண்டியன், ரவீந்திரநாத் போன்றோர் முன்வரிசையில் அமர, எல்.முருகன், அண்ணாமலை முதலானோர் பின்வரிசையில் அமர்ந்தனர்.

> மோடி பேசுகையில், "தென்னிந்தியாவில் என்டிஏ புதிய அரசியலை துவக்கியுள்ளது என்பதை இந்தத் தேர்தலில் நான் கண்டேன். கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் இப்போதுதான் புதிய ஆட்சிகள் அமைந்தன. எனினும், இந்தத் தேர்தலில் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியைத் தழுவினர். தமிழக பாஜக அணிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அங்கு எம்பிக்கள் யாரும் இல்லை. ஆனால் தொண்டர்கள் பாஜக கொடியை உயர்த்தி பிடித்துள்ளனர். இன்று தமிழகத்தில் எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் எங்களது வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது" என்று பெருமையாக கூறினார். இதேபோல் தனது பேச்சில், பவன் கல்யாணை சுட்டிக்காட்டிய மோடி, “நீங்கள் பார்ப்பது பவன், அவரின் பெயருக்கு ஏற்றாற்போல் அவர் தென்றல் அல்ல; அவர் ஒரு புயல்" என்று பாராட்டினார்.

  • சக்திவாய்ந்த தலைவர் சந்திரபாபு நாயுடு என்று மோடி தனது பேச்சில் புகழ்ந்து பேசினார்.
  • அதேபோல், NDA-க்கு புதிய விளக்கம் கூறிய மோடி, (N-New India, D-Developed India, A-Aspirational India) என்டிஏ என்றால் புதிய இந்தியா, வளர்ந்த இந்தியா, லட்சிய இந்தியா என்று கூறினார்.
  • ஓபிஎஸ், ஜிகே வாசன் அருகருகே அமர்ந்திருந்தனர். அப்போது மோடி இந்தியில் பேசியதை ஒபிஎஸ்ஸுக்கு தமிழில் விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார் ஜி.கே.வாசன்.
  • மோடி பேசி முடித்ததும் அவரை வாழ்த்தி அவருடன் புகைப்படம் எடுக்க கூட்டம் முண்டியடித்து.
  • தமிழக தலைவர்கள் தனித்தனியாக சென்று மோடியை வாழ்த்தினர்.
  • ஓபிஎஸ் மகனும், முன்னாள் எம்பியுமான ரவீந்திரநாத் லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பஸ்வானுக்காக அவர் மோடியுடன் இருக்கும் புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தார். இதற்காக சில வினாடிகள் கையில் செல்போனுடன் அவர் கூட்டத்தில் முண்டியடித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் கணிசமான இடங்களில் பாஜக தோல்வியை தழுவியது. தோல்வியால் துவண்டு விடக்கூடாது என்பது போல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்த வந்தபோது அவரை தோளில் தட்டிக்கொடுத்தார் மோடி. | வாசிக்க > “ஏழை, நடுத்தர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதே எங்கள் முன்னுரிமை” - பிரதமர் மோடி | என்டிஏ கூட்டத்தில் வெற்றி உரை

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x