Published : 07 Jun 2024 10:19 AM
Last Updated : 07 Jun 2024 10:19 AM
ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக்கின் நிழலாக இருந்த வி.கே.பாண்டியன், தேர்தல் தோல்விக்குப் பிறகு மாயமானதாக சர்ச்சை எழுந்துள்ளது. ஒடிசாவில் சுமார் 24 வருடங்களாக தொடர்ந்து 5 முறை ஆட்சி செய்த பிஜேடி தலைவர் நவீனுக்கு, தேர்தல் முடிவுகள் படு தோல்வியை அளித்தன.
ஒடிசாவின் 21 மக்களவைத் தொகுதிகளில் பிஜேடிக்கு ஒன்றுகூட கிடைக்கவில்லை. சட்டப்பேரவையின் 147 இடங்களில் பாஜக 79 இடங்களை பெற்று முதன்முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைக்க உள்ளது. பிஜேடி 51, காங்கிரஸ் 14, பிற கட்சிகள் 4 இடங்களை பெற்றன.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு நவீன் பட்நாயக்குடன் நெருக்கமாக இருந்த வி.கே.பாண்டியன், பொதுவெளியில் எவர் கண்களிலும் படவில்லை என செய்திகள் வெளியாகியுள்ளன. ராஜினாமா கடிதம் அளிக்க ஆளுநரிடம் சென்ற முதல்வர் நவீனுடனும், பாண்டியன் செல்லவில்லை.
இதனால் வி.கே.பாண்டியனின் மாயம் குறித்து பிஜேடி கட்சியினர் இடையே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. இத்துடன், பிஜேடியின் தோல்விக்கு பாண்டியன்தான் காரணம் எனவும் புகார்கள் கிளம்பத் தொடங்கின.
இதுகுறித்து பிஜேடியின் மூத்த எம்எல்ஏ சவுமியா ரஞ்சன் பட்நாயக் கூறுகையில், “தனக்கு நெருக்கமான பாண்டியன் மீது தோல்விக்கான புகாரை வைத்து விட்டு தலைவர் நவீன் ஒதுங்கக் கூடாது. இந்த பாண்டியன் என்பவர் யார்? இவர் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்காக கட்சி செலவில் ஹெலிகாப்டரில் சுற்றி வந்தார்? இதற்காக அவருக்கு அதிகாரங்கள் அளித்தது தலைவர் நவீன் தானா?” எனக் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுபோன்ற புகார் தேர்தலுக்கு முன்பாகவும் எழுந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் முதல்வர் நவீன், “பாண்டியன் என்னுடைய அரசியல் வாரிசு அல்ல. ஒடிசா மக்கள் தான் எனது வாரிசை தேர்வு செய்வார்கள்” எனக் குறிப்பிட்டிருந்தார். எதிர்க்கட்சியாக இருந்த பாஜகவும் தனது பிரச்சாரத்தில், ‘வெளி மாநிலத்தவரான தமிழன்தான் ஒடிசாவை ஆள வேண்டுமா?’ என தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தது.
மதுரையை சேர்ந்த வி.கே.பாண்டியன், 2000 ஆம் ஆண்டு பேட்ச், பஞ்சாப் கேடர் ஐஏஎஸ் அதிகாரி ஆவார். பாண்டியன் தன்னுடன் ஐஏஎஸ் முடித்த சுஜாதா எனும் ஒடிசா அதிகாரியை திருமணம் செய்துகொண்டார். பிறகு பாண்டியனும் தனது பணியை ஒடிசாவுக்கு மாற்றிக்கொண்டார்.
பாண்டியன் தனது பணியின்போது நிர்வாகத் திறமையால் ஒடிசா மக்களிடம் நற்பெயர் பெற்றார். இதனால், முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடிச் செயலாளராக நியமிக்கப்பட்ட அவர், முதல்வருக்கு நெருக்கமான அதிகாரியானர்.
இந்த நெருக்கம் காரணமாக, ஆளும் கட்சியான பிஜேடியின் பல தலைவர்கள் ராஜினாமா செய்தனர். எனினும் முதல்வரின் நிழலாகத் தொடர்ந்த பாண்டியன் கடந்த அக்டோபரில் ஐஏஎஸ் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.
பிறகு பிஜேடியில் இணைந்த அவரிடம் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் பொறுப்புகளை நவீன் பட்நாயக் ஒப்படைத்தார். இதனால், 24 மணி நேரமும் முதல்வர் நவீனின் நிழலாக அவரது வீட்டிலேயே பெரும்பாலான நேரங்கள் தங்கியதாகவும் கூறப்பட்டது.
வி.கே.பாண்டியன் பிஜேடியில் இணைந்த பிறகு எதிர்க்கட்சியான பாஜகவுடன் கூட்டணி அமைக்கவும் முயற்சி செய்தார். இவரது விருப்ப ஓய்வு கடிதத்தை மத்திய அரசு 3 நாட்களில் ஏற்றது நினைவு கூரத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...