Published : 07 Jun 2024 09:57 AM
Last Updated : 07 Jun 2024 09:57 AM
ஆந்திர மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 135 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி வென்றது. அதன் தோழமை கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி வென்றது.
ஆளும் கட்சியாக இருந்த ஓய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து ஆந்திர மாநிலத்தில் 4-வது முறையாக சந்திரபாபு நாயுடு முதல்வராக வரும் 12-ம் தேதி பதவி ஏற்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் அமராவதியில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு, பிரதமர் மோடிக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார்.
மக்களவை தொகுதிகளிலும் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சி 16 இடங்களை வென்றது. அதன் தோழமை கட்சிகளான ஜனசேனா 2 இடங்களிலும், பாஜக 3 இடங்களிலும் வென்றன. தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 16 எம்பிக்களின் ஆலோசனை கூட்டம் அமராவதியில் உள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் நேற்று காலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இயலாத எம்பிக்கள் காணொலி மூலம் கலந்து கொண்டனர்.
இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:மக்கள் கொடுத்த தீர்ப்பினால், பதவி கிடைத்து விட்டது என யாரும் காற்றில் மிதக்க வேண்டாம். கொடுத்த பதவியை மக்களுக்காகவே பயன்படுத்த வேண்டும். ஜெகன்மோகன் ரெட்டிக்கு கடந்த 2019-ல் 23 எம்பிக்களை மக்கள் கொடுத்தார்கள். ஆனால், அவர் மீது உள்ள வழக்குகளை சமாளித்து கொள்ளவே அதனை பயன் படுத்தி கொண்டார்.
மாநிலத்தின் முன்னேற்றமே நமது தாரக மந்திரம். அதற்கு தகுந்தாற்போல் நாம் நாடாளுமன்றத்தில் நடந்து கொள்ள வேண்டும். ஜெகன் ஆட்சியில் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது பல கொடுமைகள் அரங்கேறின. பலர் இதில் உயிரிழந்தனர். அவர்களின் தியாகமே நம்மை இந்த நிலையில் உட்கார வைத்துள்ளது.
பதவிகள் நிரந்தரம் என யாரும் நினைக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை (இன்று) நமது கட்சி எம்பிக்கள் அனைவரும் டெல்லி சென்று, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவிக்கிறோம். மேலும், மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிப்பது குறித்து ஆலோசனை நடத்துகிறோம்.
பிரதமர் மோடியின் 3-வது முறையாக பதவி ஏற்பு விழாவில் அனைவரும் பங்கேற்று அவருக்கு நமது ஆதரவை தெரிவிக்கிறோம். அமராவதியில் 12-ம் தேதி நடைபெறும் எனது முதல்வர் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியும் பங்கேற்க வருவதாக தெரிவித்துள்ளார். இவ்வாறு சந்திரபாபு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT