Published : 07 May 2018 08:14 AM
Last Updated : 07 May 2018 08:14 AM

தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ் திருப்பதி கோயிலை மாற்றும் திட்டம் வாபஸ்: பக்தர்களின் எதிர்ப்பால் பின்வாங்கியது மத்திய அரசு

திருப்பதி ஏழுமலையான் கோயிலை மத்திய தொல்லியல் துறைக்கு மாற்றுவது தொடர்பாக அந்தத் துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பக்தர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த நோட்டீஸ் உடனடியாக வாபஸ் பெறப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். சோழர் காலத்தில் தோன்றிய இந்த கோயில் சேரர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜய நகர பேரரசர்கள், மஹந்திக்கள், சுல்தான்கள், நவாபுகள், ஆங்கிலேயர்கள், ஜமீன்கள், மிராசுதாரர் கள் அதிகாரத்தின் கீழ் பராமரிக்கப்பட்டது. நாடு சுதந்திரம் அடை யும் முன்பு மதராஸ் மாகாணம் சார்பில் திருப்பதி கோயில் பாராமரிக்கப்பட்டது. பின்னர், 1933- ம் ஆண்டில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தொடங்கப்பட்டு, இன்றுவரை கோயிலை தேவஸ்தானம் பராமரித்து வருகிறது.

ஆந்திரா, தமிழகம் பிரிந்தபோது, திருப்பதி ஏழுமலையான் கோயில், ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் ஆகியவை ஆந்திராவிடம் ஒப்படைக்கப்பட்டன. திருமலை ஏழுமலையான் கோயில் மட்டுமின்றி, திருமலையில் உள்ள வராக சுவாமி கோயில், திருப்பதி கோவிந்தராஜ பெருமாள், திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில், ஸ்ரீநிவாச மங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேச பெருமாள், கபிலேஸ்வரர் கோயில், கோதண்டராமர் கோயில் உட்பட பல்வேறு கோயில்களையும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பராமரித்து வருகிறது.

மத்திய அரசு கடிதம்

இந்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறை சார்பில் ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள தொல்லியல் துறைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து கோயில்களின் சொத்து விவரங்கள், அதன் வரலாறுகள் குறித்து தகவல்களை அனுப்பும்படி குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அமராவதி யில் உள்ள தொல்லியல் துறை சார்பில் திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரியான அணில்குமார் சிங்காலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த தேவஸ்தான அதிகாரிகள், உடனடியாக நீதிமன்றத்தை நாட முடிவு செய்தனர். இந்த விவகாரம் பக்தர்களுக்கிடையே பெரும் விவாதத்தை கிளப்பியது. உலகிலேயே பணக்கார கடவு ளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலை தொல்லியல் துறை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சிப்பது ஏன் என பக்தர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், ஏற்கெனவே அனுப்பப்பட்ட நோட்டீஸ் வாபஸ் பெறப்படுவதாக அமராவதி தொல்லியல் துறை சார்பில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு நேற்று கடிதம் அனுப்பப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x