Published : 06 Jun 2024 09:27 PM
Last Updated : 06 Jun 2024 09:27 PM

கங்கனாவை தாக்கியது ஏன்? - விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கம்

சண்டிகர்: நடிகை கங்கனா ரணாவத்தை கன்னத்தில் அறைந்தது ஏன் என்பது குறித்து சிஐஎஸ்எஃப் பெண் காவலர் விளக்கமளித்துள்ளார். அவரது விளக்க வீடியோ வைரலாகி வருகிறது.

டெல்லி செல்வதற்காக நடிகை கங்கனா ரணாவத் சண்டிகர் விமான நிலையம் வந்தபோது, பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை.

இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர், “100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார். அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் குல்விந்தர் கவுரை பொறுத்தவரை அவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி கூறும்போது “இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

கங்கனா ரணாவத் சொன்னது என்ன? - கடந்த 2020-ம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதில் குறிப்பிட்ட ஒரு போராட்டத்தை மேற்கொள்காட்டி அதிலிருக்கும் மூத்த விவசாய பெண்ணை குறிப்பிட்டு நடிகை கங்கனா தனது எக்ஸ் தள பக்கத்தில், “100 ரூபாய்க்காக அவர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்” என குறிப்பிட்டிருந்தார். இந்தப் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து அதனை தனது எக்ஸ் தள பக்கத்திலிருந்து கங்கனா நீக்கிவிட்டார்.

முன்னதாக தன்னை தாக்கியது குறித்து எக்ஸ் தள பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா, “நான் நன்றாக இருக்கிறேன். விமான நிலையத்தில் நடைபெற்ற பாதுகாப்பு சோதனையின்போது அந்தச் சம்பவம் நடைபெற்றது. சோதனை முடிந்த பின், நான் செல்லும்போது அந்த பெண் காவலர் வேறு ஒரு கேபினில் அமர்ந்திருந்தார். நான் அவரைக் கடக்கும்போது அவர் என் முகத்தில் அடித்தார்; பின்பு என்னை திட்டினார்.

ஏன் இப்படி செய்தாய் என்று நான் அவரிடம் கேட்டேன், அதற்கு அவர், விவசாயிகளின் போராட்டத்துக்காகதான் இப்படி செய்தேன் என்றார். பஞ்சாபில் பயங்கரவாதம் அதிகரித்து வருவதும், இதை எப்படி கையாள்வது என்பதும் தான் எனக்கு கவலை அளிக்கிறது” என தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x