Published : 06 Jun 2024 03:46 PM
Last Updated : 06 Jun 2024 03:46 PM

“ஆட்சி அமைக்கும் முன்பாகவே வன்முறை” - தெலுங்கு தேசம் கட்சி மீது ஜெகன் மோகன் புகார்

ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதி: “ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது” என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் ஜெகன்மோகன் ரெட்டி வெளியிட்டுள்ள பதிவில், “தெலுங்கு தேசம் கட்சியினரின் வன்முறைகளால் ஆந்திர மாநிலம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஆட்சி அமைக்கும் முன்பாகவே தெலுங்கு தேசம் கட்சியின் கும்பல்கள் வெறித்தனமாக செயல்படுகிறார்கள். கிராம நிர்வாக அலுவலகங்கள் உட்பட அரசு மற்றும் தனியார் சொத்துகள் சித்தரிக்கப்படுகின்றன.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர்களும், தொண்டர்களும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர். அவர்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஆளுங்கட்சியின் அழுத்தங்களால் காவல்துறை மந்தமாக உள்ளது. கடந்த ஐந்து வருடங்களாக மாநிலத்தில் நிலவி வந்த அமைதி மற்றும் பாதுகாப்பு ஒட்டுமொத்தமாக சீர்குலைக்கப்பட்டு வருகின்றன. ஆளுநர் இதில் உடனடியாக தலையிட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அரசாங்க சொத்துக்கள் சேதப்படுத்துவதையும் தடுத்து நிறுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம்.

ஆனால், தெலுங்கு தேசம் கட்சி இம்முறை 135 தொகுதிகளிலும், இதன் தோழமை கட்சிகளான பாஜக 8 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும் என மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வி அடைந்ததுள்ளது. மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே மக்கள் வாகை சூடியுள்ளனர். 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16, ஜனசேனா 2 மற்றும் பாஜக 3 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 4 எம்பி தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x