Published : 06 Apr 2018 08:15 AM
Last Updated : 06 Apr 2018 08:15 AM

ஹைதராபாத்துக்குள் நுழைய தனியார் பஸ்களுக்கு தடை

போக்குவரத்து நெரிசல் காரணமாக ஹைதராபாத் நகருக்குள் தனியார் பஸ்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரில் தற்போது காலை 8 மணி முதல் இரவு 10 வரை தனியார் பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இரவில் அதிக எண்ணிக்கையிலான தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல ஆங்காங்கே சாலையில் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அமைச்சர் பி.மகேந்தர் ரெட்டிக்கு தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.

இதையடுத்து அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் சேர்ந்து 2 நாட்கள் நகரில் இரவு நேரங்களில் நேரடி ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் மகேந்தர் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஹைதராபாத் நகரில் தனியார் பஸ்களுக்கு ஏற்கெனவே பகலில் தடை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இரவு நேரங்களிலும் இந்த பஸ்களால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக பெல் பகுதியிலிருந்து மியாப்பூர், கூகட்பல்லி வழியாக சஞ்சீவ் நகர், அமீர்பேட், லக்டிகாபூல், கோட்டி, தில்ஷுக் நகர், எல்.பி நகர் வழியாக செல்லும் தனியார் பஸ்கள் ஆங்காங்கே நின்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன. இதனால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக வியாழக்கிழமை (நேற்று) இரவு முதல் ஹைதராபாத் நகரின் வெளிவட்ட சாலை வரை மட்டுமே தனியார் பஸ்கள் அனுமதிக்கப்படும். இதனை மீறும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும். 2-வது முறையும் மீறினால் உரிமம் ரத்து செய்யப்படும். தனியார் பஸ் பயணிகளுக்காக வெளிவட்ட சாலை வரை அரசு பஸ் வசதி செய்யப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x