Published : 06 Jun 2024 05:04 AM
Last Updated : 06 Jun 2024 05:04 AM

ஊடகங்களில் விளம்பரம் வெளியிட புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு உத்தரவு

புதுடெல்லி: இனி ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு விளம்பரதாரர்கள் சுய அறிவிப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அலோபதி மருத்துவ முறைகளால் குணப்படுத்தப்பட முடியாத நோய்களை தங்களது ஆயுர்வேத மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்று யோகா குரு பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் விளம்பரம் வெளியிட்டு வந்தது. இதை எதிர்த்து இந்திய மருத்துவச் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இவ்வழக்கில் பதஞ்சலி நிறுவனத்தின் தவறான விளம்பரங்களை சாடிய உச்ச நீதிமன்றம், தங்களது விளம்பரங்களுக்கு மன்னிப்புகோரி அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று சில வாரங்களுக்கு முன்பு உத்தர விட்டது. இதன் தொடர்ச்சியாக, இனி ஊடகங்களில் விளம்பரம் வெளியிடுவதற்கு அனைத்து விளம்பரதாரர்களும் சுய அறிவிப்பு சான்றிதழ் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியது.

இதையடுத்து, மத்திய ஒளிபரப்பு அமைச்சம், விளம்பரம் வெளியிடுவது தொடர்பாக புதியகட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள் ளது. இதன்படி, விளம்பரங்களில் தவறான தகவல் இல்லை என்றும் ஊடக விதிகளுக்கு உட்பட்டே விளம்பரம் வெளியிடப்படுகிறது என்றும் விளம்பரதாரர்கள் சுயஅறிவிப்பு சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிவி மற்றும் ரேடியோ விளம்பரங்களுக்கு சுய அறிவிப்பு சான்றிதழை சமர்ப்பிக்க ப்ராட்காஸ்ட் சேவா தளத்திலும் அச்சுமற்றும் டிஜிட்டல் விளம்பரங்களுக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா தளத்திலும் தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 18-ம் தேதி முதல் இந்தப் புதிய கட்டுப்பாடு நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x