Published : 06 Jun 2024 06:28 AM
Last Updated : 06 Jun 2024 06:28 AM
புதுடெல்லி: சிறையில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள இன்ஜினியர் ரஷீத், அம்ரித்பால் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற உத்தரவை பெறவேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலில் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட இன்ஜினியர் ஷேக் அப்துல் ரஷீத் 2,04,142 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவர் தீவிரவாத அமைப்பு களுக்கு நிதி அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்ததால், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். சிறையில் இருந்து கொண்டே தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.
இவரைப் போல் வாரிஸ் டி அமைப்பின் தலைவரும், பிரிவினைவாதியுமான அம்ரித்பால் சிங், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அசாம் திப்ரூகர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். இவர் பஞ்சாப்பின் கதூர் சாகிப் தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 97 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கைதிகள் இருவர் எம்.பி.யாகியுள்ளதால், இவர்கள் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது குறித்து டெல்லி சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கைதி, நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள நீதிமன்ற அனுமதி தேவை. அவ்வாறு அவர்கள் சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்த்திலான அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அப்போது அவர்கள் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள்மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT