Published : 06 Jun 2024 06:12 AM
Last Updated : 06 Jun 2024 06:12 AM
அமராவதி: தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (என்டிஏ) சேர்ந்தே பணியாற்று வோம் என தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நேற்று உறுதிபட கூறியுள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 சட்டப்பேரவை தொகுதிகளில் 88 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கலாம்.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சி இம்முறை 135 தொகுதிகளிலும், இதன் தோழமை கட்சிகளான பாஜக 8 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும் என மொத்தம் 164 தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வெறும் 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று படு தோல்வி அடைந்ததுள்ளது. மக்களவைத் தேர்தலிலும் தெலுங்கு தேசம் கூட்டணிக்கே மக்கள் வாகை சூடியுள்ளனர். 25 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16, ஜனசேனா 2 மற்றும் பாஜக 3 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளில் இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வெறும் 4 எம்பி தொகுதிகளில் மட்டுமேவெற்றி பெற்றுள்ளது. கடப்பா நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா தோல்வி அடைந்தார்.
இந்நிலையில், நேற்று காலை அமராவதியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியதாவது:
தெலுங்கு தேசம் கூட்டணிக்கு இந்த மாபெரும் வெற்றியை கொடுத்த மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் கடந்த 5 ஆண்டு ஜெகன் ஆட்சியை போல் எப்போதுமே பார்த்தது கூட கிடையாது. அரசியலில் யாருமே நிரந்தரம் இல்லை. மக்கள், கட்சி, ஜனநாயகம் இவையே நிரந்தரம்.
மக்கள் முடிவு செய்து விட்டால் செய்ததுதான். தெலுங்கு தேசம் கட்சியின் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் எழுதி வைக்க வேண்டிய தேர்தல் முடிவுகள் இது.
என்னை கைது செய்ய வந்தபோது, என்ன குற்றத்திற்காக கைதுசெய்கிறீர்கள் என கேட்டதற்கு, இனிமேல் தான் உன் மீது வழக்கே போடவேண்டும். ஆனால் கைது செய்வோம் என கூறினர். இவ்வளவு அராஜகம் ஜெகன் ஆட்சியில் நடந்தது.
நாங்கள் ஆட்சியாளர்கள் அல்ல. சேவகர்கள் மட்டுமே. எங்களின் தேர்தல் அறிக்கை மக்களிடையே சென்றடைந்தது. அரசுக்கு எதிரானவாக்குகள் சிதறிவிடக் கூடாது என பவன் கல்யாண் உறுதியாக நின்றார். எங்களுடன் பாஜகவும்இணைந்தது. இனி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்துபணி செய்வோம்.
மாநிலத்தையும், நாட்டையும் முன்னோக்கி கொண்டு செல்வோம். எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பாதம் தொட்டு வணங்கி நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT