Published : 07 Apr 2018 07:54 AM
Last Updated : 07 Apr 2018 07:54 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தற்போது நாளொன்றுக்கு சராசரியாக ரூ. 3 கோடி உண்டியல் வருமானம் கிடைத்து வருகிறது. இதுகுறித்து தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில்குமார் சிங்கால் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் ஏழுமலையான் உண்டியலில் பக்தர்கள் ரூ. 95.94 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். இது முந்தைய பிப்ரவரி மாதத்தை விட ரூ. 9.44 கோடி அதிகமாகும். மேலும் மார்ச் மாதத்தில் 21.32 லட்சம் பக்தர்கள் சுவாமியை தரிசித்துள்ளனர். 92.99 லட்சம் லட்டு பிரசாதம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 29.98 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது. 8.65 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்” என்றார்.
இதனிடையே அன்னமய்யா பவனில் நேற்று ‘டயல் யுவர் இஓ’ எனப்படும், தொலைபேசி மூலம் பக்தர்களின் குறைகேட்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் நிறை, குறைகளை தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்காலிடம் தெரிவித்தனர். குறிப்பாக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு காலையில் உப்புமா, பொங்கல் போன்ற சிற்றுண்டிகளுக்கு சட்னி அல்லது ஊறுகாய் வழங்கினால் பக்தர்கள் வீணாக்காமல் சாப்பிடுவார்கள் என ஆலோசனை வழங்கப்பட்டது.
இதுபோல் 65 வயது நிறைந்த முதியோர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்தவுடன் அவர்களுக்கு வாகன வசதி செய்துதர கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அனில் குமார் சிங்கால் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT