Published : 05 Jun 2024 07:04 PM
Last Updated : 05 Jun 2024 07:04 PM
புதுடெல்லி: தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.
மக்களவைத் தேர்தல் முடிவை அடுத்து, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் முதல் ஆலோசனைக் கூட்டம் புதுடெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தில் இன்று நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, ராஜ்நாத் சிங், அமித் ஷா, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார், சிவ சேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர் ஹெச்.டி. குமாரசாமி, லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ்) தலைவர் சிராக் பாஸ்வான், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா தலைவர் ஜிதன் ராம் மாஞ்சி, ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண், தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் படேல், அப்னா தல் (சோனிலால்) கட்சித் தலைவர் அனுப்பிரியா படேல் உள்ளிட்ட 21 தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோடி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக பாஜக அறிவித்துள்ளது. மேலும், மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் துன்பப்படும் இந்திய குடிமக்களுக்கு சேவை செய்வதில் உறுதியாக உள்ளதாகவும், இந்தியாவின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதன் மூலம் இந்திய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும், நாட்டின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து பணியாற்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT