Published : 05 Jun 2024 05:44 PM
Last Updated : 05 Jun 2024 05:44 PM
புதுடெல்லி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 25 வயதுக்குட்பட்ட 4 பேர் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் சஞ்சனா ஜாதவ், லோக் ஜனசக்தி கட்சியின் சாம்பவி சவுத்ரி, சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த புஷ்பேந்திர சரோஜ் மற்றும் பிரிய சரோஜ் ஆகியோர் எம்.பிக்கள் ஆக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவது மக்களவை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272 தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. இதையடுத்து மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையவிருக்கிறது. தற்போது மக்களவைக்கு தேர்வாகியிருக்கும் 25 வயதுக்குட்பட்ட இளம் வயதான எம்.பிக்களை பற்றி சற்றே சுருக்கமாக காணலாம்.
சாம்பவி சவுத்ரி: பிஹாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத்தின் அசோக் சவுத்ரியின் மகள் தான் சாம்பவி சவுத்ரி. இவர் வயது 25.. பிஹாரின் சமஸ்திபூர் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் களமிறங்கி காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தார். தேர்தல் பிரசாரத்தின் போது, இளம் வயது வேட்பாளர் என பிரதமர் மோடி பாராட்டி இருந்தார்.
டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் சமூகவியலில் (Sociology) முதுகலைப் பட்டம் பெற்ற அவர், தற்போது மகத் பல்கலைக்கழகத்தில் தனது பிஎச்டி படிப்பை மேற்கொண்டு வருகிறார். சாம்பவி குணால் சவுத்ரியின் குடும்பத்தினர் மூன்றாம் தலைமுறையாக அரசியலில் களம் காண்கின்றனர்.
சஞ்சனா ஜாதவ்: ராஜஸ்தானின் பாரத்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சனா ஜாதவ். 25 வயதான அவர் பாஜகவின் ராம்ஸ்வரூப் கோலியை 51,983 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தற்போது வெற்றி பெற்றுள்ளார். இவர் ராஜஸ்தானில் போலீஸ் ஏட்டு ஆக பணிபுரியும் கப்தன் சிங் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
எல்எல்பி வரை படித்திருக்கும் இவர் அரசியலில் மிகுந்த ஆர்வமிக்கவராகவும் அறியப்படுகிறார். சஞ்சனா அல்வார் மாவட்ட கவுன்சில் உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதோடு, பிரியங்கா காந்தியின் குட் லிஸ்டில் இடம் பெற்றுள்ள பெண்களில் சஞ்சனாவும் ஒருவர். இவர் பட்டியலின மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு முக்கிய இளம் தலைவராக பார்க்கப்படுகிறார்.
புஷ்பேந்திர சரோஜ்: சமாஜ்வாதி கட்சி சார்பில் கவுசம்பி தொகுதியில் போட்டியிட்டவர் புஷ்பேந்திர சரோஜ். 25 வயதாகும் இவர் பாஜக வேட்பாளரை 1,03,944 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர், சமாஜ்வாதி கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் இந்தர்ஜித் சரோஜ் என்பவரின் மகன். தந்தை 2019 ல் இந்த தொகுதியில் தோல்வியடைந்த நிலையில், மகன் தற்போது வெற்றி பெற்றுள்ளார். புஷ்பேந்திர சரோஜ் லண்டன் குயின் மேரி பல்கலையில் கணக்கு பதிவியல் மற்றும் நிர்வாகம் குறித்த படிப்பில் பட்டப்படிப்பு முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா சரோஜ்: சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட பிரியா சரோஜ் தந்தை டூபானி சரோஜ் 3 முறை எம்.பி ஆக இருந்தவர். இந்நிலையில், அவர் 35,850 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக எம்பியான போலாநாத்தை தோற்கடித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT