Published : 05 Jun 2024 05:37 AM
Last Updated : 05 Jun 2024 05:37 AM

தனி பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கிறது பாஜக: 3-வது முறையாக பிரதமர் ஆகிறார் மோடி

மக்களவை தேர்தல் வெற்றியை தொடர்ந்து, டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்த கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.படம்: பிடிஐ

புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.

நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம்உள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் பாஜகவேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணிக்கும் நேரடி போட்டி நிலவியது.

இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 1.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இதில், உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் 3.90 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், கேரளாவின் வயநாடு தொகுதியில் 3.64 லட்சம் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார்.

மத்தியில் ஆட்சி அமைக்க 272எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், ஆளும் பாஜகவுக்கு தனித்து அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. உத்தர பிரதேசம், மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பது, பாஜகவுக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. மேற்கு வங்கத்திலும் பாஜகவுக்கு எதிர்பார்த்த அளவு வெற்றி கிடைக்கவில்லை.

எனினும், ஒடிசா, தெலங்கானா, கர்நாடகாவில் கணிசமான தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. கேரளாவின் திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர்சுரேஷ் கோபி 74,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கிறது. பிரதமராக மோடி 3-வது முறை யாக பதவியேற்க உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் வரும் 9-ம் தேதி பதவியேற்பு விழா நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியை இழுக்க இண்டியா கூட்டணி தலைவர்கள் திரைமறைவில் தீவிர முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், இண்டியா கூட்டணியில் இணைய மாட்டோம் என்று ஜேடியு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

புதிய அரசில், நிதிஷ் குமாருக்குதுணை பிரதமர் பதவியும், சந்திரபாபு நாயுடுவுக்கு தேசிய ஜனநாயக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

‘மத்தியில் தொடர்ந்து 3-வது முறை ஆட்சி அமைப்பதற்காக பாஜக கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு தலை வணங்குகிறேன்’ என்று பிரதமர் மோடி, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

கணிப்புகள் பொய்த்தன: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் கடந்த 1-ம் தேதி மாலை வெளியாகின. ‘பாஜக கூட்டணி 350 - 415 தொகுதிகளை கைப்பற்றும். இண்டியா கூட்டணிக்கு 150 தொகுதிகள் வரை கிடைக்கும்’ என்றே பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்தன. ஆனால், கணிப்புகளை பொய்யாக்கி இண்டியா கூட்டணி 230 தொகுதிகளை தாண்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x