Last Updated : 04 Jun, 2024 09:21 PM

13  

Published : 04 Jun 2024 09:21 PM
Last Updated : 04 Jun 2024 09:21 PM

அயோத்தில் பாஜக தோல்வி: 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் சமாஜ்வாதி வெற்றி

புதுடெல்லி: உத்தர பிரதேசம் அயோத்தி உள்ளடக்கிய பைஸாபாத்தில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு சமாஜ்வாதியின் வேட்பாளர் அவ்தேஷ் பிரசாத் சுமார் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

உ.பி. முதல் மத்தியில் ஆட்சி அமைப்பது வரை காரணமாக இருப்பது எனக் கருதப்பட்டது அயோத்தி தொகுதி. இங்கு பல ஆண்டுகளாக பாபர் மசூதி, ராமர் கோயில் விவகாரம் நிலவி வந்தது.

தனது ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும் உறுதியை பாஜக அளித்தது. இதனால், ராமர் கோயில் பிரச்சனையில் அரசியல் ஆதாயம் தேட பாஜக முயல்வதாகப் புகாரும் எழுந்திருந்தது.

இந்நிலையில், இதன் மேல்முறையீட்டு தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 9, 2019 இல் ராமர் கோயிலுக்கான வழி பிறந்தது. இதையடுத்து நீதிமன்ற அமர்வின் உத்தரவின்படி, அறக்கட்டளை அமைக்கப்பட்டு ராமர் கோயில் கட்டப்படுகிறது.

இதற்கான பூமி பூஜையை பிரதமர் மோடி முன்னிருந்து நடத்தினார். கடந்த ஜனவரியில் ராமர் கோயிலின் தரைத்தளம் கட்டப்பட்டு பிரதமர் நரேந்திரமோடியால் திறந்து வைக்கப்பட்டது.

எனவே, ராமர் கோயிலால், உ.பி.யில் பாஜகவிற்கு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி உறுதி எனக் கருதப்பட்டது. இதன் பலன் நாட்டின் இதர மாநிலங்களிலும் கிடைக்கும் எதிர்பார்ப்பும் பாஜகவிற்கு இருந்தது.

ஆனால், இந்த பலன் தற்போது உ.பி.யிலேயே கிடைக்காமல் போய் விட்டது. அயோத்யாவின் தொகுதியில் பாஜக வேட்பாளர் லல்லுசிங் சுமார் 55,000 வாக்குகளில் தோல்வி அடைந்துள்ளார்.

இங்கு சமாஜ்வாதி சார்பில் போட்டியிட்ட அவ்தேஷ் பிரசாத்திற்கு கிடைத்த வெற்றி வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமர் கோயில் விவகாரம் எழுந்தது முதல் பைஸாபாத்தும் ஒரு முக்கியத் தொகுதியாகி விட்டது.

நீண்ட காலமாக பாஜக வசமுள்ள பைஸாபாத்தில் 2009 இல் மட்டுமே காங்கிரஸ் வென்றிருந்தது. பிறகு 2014 முதல் பாஜகவின் எம்பியாக உள்ள லல்லுசிங் மீண்டும் அங்கு போட்டியிட்டிருந்தார்.

இவர் அயோத்தி சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை பாஜக எம்எல்ஏவாகவும் இருந்தவர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லல்லுசிங்கின் வெற்றி, 2014 தேர்தலில் தோல்வியில் முடிந்துள்ளது.

பைஸாபாத்தில் இண்டியா கூட்டணியின் அங்கமாக இருந்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தனித்து போட்டியிட்டது. கடந்த 1989 மக்களவை தேர்தலில் சிபிஐ சார்பில் பைஸாபாத்தின் எம்பியானார் மித்ரஸென் யாதவ்.

இவரது மகன் அர்விந்த்ஸென் யாதவ் இந்தமுறை சிபிஐக்காகப் போட்டியிட்டார். ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரியான அர்விந்த்ஸென், பைஸாபாத்தில் சமாஜ்வாதி வேட்பாளரின் வாக்குகளை அதிகமாகப் பிரிப்பார் என அஞ்சப்பட்டது.

ராமர் கோயில் கட்டப்பட்டதில் தன் மீதானப் புகாருக்கு பாஜகவும் அஞ்சியிருந்தது. இதனால், பாஜகவும் கடைசிகட்ட தேர்தல்களில் மட்டும் ராமர் கோயிலை பற்றி பேசத் துவங்கியது.

குறிப்பாக, இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் இடிக்கப்பட்டு விடும் என்ற பீதியை பிரதமர் மோடியே கிளப்பியிருந்தார். இதுபோன்ற கருத்துக்களும் பைஸாபாத்தில் பாஜகவின் தோல்விக்கு காராணமாகி விட்டதாகக் கருதப்படுகிறது.

பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் சார்பில் பைஸாபாத்திற்கு ரூ.50,000 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அமலாகி வருகின்றன. எனினும், சமாஜ்வாதியை வெற்றிபெறச் செய்து பைஸாபாத்வாசிகள், ராமர் கோயிலை அரசியலில் இருந்து பிரித்து வைத்து விட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x