Published : 04 Jun 2024 07:52 PM
Last Updated : 04 Jun 2024 07:52 PM
அமராவதி: தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி, பாஜக, ஜனசேனா கூட்டணி. 175 சட்டப்பேரவை தொகுதிகளில் இக்கூட்டணி 164 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது இக்கூட்டணி.
தெலுங்கு தேசம் 135 தொகுதிகளிலும், ஜனசேனா 21 தொகுதிகளிலும், பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளன. அதேநேரம், ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளில் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடம் கூட வெற்றிபெறவில்லை.
குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டுள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு 48006 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார். இதேபோன்று புலிவேந்துலா தொகுதியில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 116315 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். பிட்டாபுரம் தொகுதியில் நடிகர் பவன் கல்யாண் 134394 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, வரும் 9ம் தேதி முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்க உள்ளதாக தெலுங்கு தேசம் கட்சி அறிவித்துள்ளது.
ஒடிசாவில் ஆட்சியை பிடித்த பாஜக: ஒடிசா சட்டப்பேரவை தேர்தலில் பெரும்பான்மையை பெற்று ஆட்சியமைக்க உள்ளது பாஜக. மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் பாஜக 78 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. அதேநேரம் பிஜேடி 51 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது. காங்கிரஸ் கூட்டணி 15 சட்டப்பேரவை தொகுதிகளிலும், சுயேச்சை வேட்பாளர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் வெற்றியை பதிவு செய்துள்ளார். பாஜக ஆட்சியை கைப்பற்றி இருப்பதன் மூலம் 24 ஆண்டுகளாக ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT