Published : 04 Jun 2024 06:38 PM
Last Updated : 04 Jun 2024 06:38 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மத்தியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்யுமா என்ற கேள்விக்கு காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார்.
“இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா? அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்” என்று ராகுல் காந்தி சூசக பதில் அளித்துள்ளார்.
மேலும், அரசியல் சாசனத்தை காக்க தேர்தல் அரசியலில் இண்டியா கூட்டணி போராடியதாக காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் வயநாடு மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
டெல்லியில் பத்திரிகையாளர்களை அவர் சந்தித்து பேசுகையில், “நாங்கள் இந்த தேர்தலில் பாஜக என்ற கட்சியை மட்டும் எதிர்த்து போராடவில்லை. அமலாக்கத் துறை, சிபிஐ, நீதித்துறை உள்ளிட்ட அரசு நிறுவனங்களுடன் போராட வேண்டியிருந்தது. இது அனைத்தும் மோடி மற்றும் அமித் ஷாவின் கட்டுப்பாட்டில் உள்ளன.
அரசியல் சாசனத்தை காக்க தேர்தலில் நாங்கள் போராடினோம். மோடி தலைமையிலான அரசை மக்கள் புறக்கணித்து உள்ளனர். தேர்தல் முடிவுகள் அதை உறுதி செய்துள்ளன. உத்தரப் பிரதேச மக்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தை புரிந்து கொண்டு, அதனை பாதுகாக்கும் வகையில் இண்டியா கூட்டணியை ஆதரித்துள்ளனர். அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இண்டியா கூட்டணிக் கட்சிகள் நாளை கூடும். அப்போது, நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர விரும்புகிறோமா அல்லது வேறு முயற்சியை விரும்புகிறோமா என்பதை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம்.
இண்டியா கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்த்துக் கொள்வது குறித்து நாளை கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசிய பிறகு முடிவு செய்வோம். எங்களது கூட்டணி கட்சிகளுக்கு நாங்கள் மதிப்பளிக்கிறோம். அவர்களுடன் கலந்து பேசாமல் எங்களால் எதுவும் சொல்ல இயலாது.
நான் வயநாடு மற்றும் ராய்பரேலி என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளேன். எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதில் எந்த தொகுதியை நான் தக்கவைப்பது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என ராகுல் காந்தி தெரிவித்தார். அவருடன் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரும் இருந்தனர்.
இந்நிலையில், நாளை ஐக்கிய ஜனதா தள கட்சியும், தெலுங்கு தேசம் கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT