Published : 04 Jun 2024 04:31 PM
Last Updated : 04 Jun 2024 04:31 PM
இம்பால்: இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் உள்ள இரண்டு மக்களவை தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில் 210-க்கும்மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர். மாநிலத்தில் அமைதி இன்னும் முழுமையாக திரும்பவில்லை.
எனினும், வன்முறை சம்பவத்துக்கு பாஜக மீது குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், மத ரீதியாக மணிப்பூரை கலவரத்துக்கு தூண்டியது பாஜக தான் என்று பெரிய அளவில் போராட்டங்களை முன்னெடுத்தன. மேலும் பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாததை குறிவைத்தும் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.
காங்கிரஸ் வெற்றி....: இந்நிலையில், மணிப்பூரில் உள் மணிப்பூர், வெளி மணிப்பூர் என 2 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளிலும் ஏப்ரல் 19, 26 என இரண்டு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வன்முறைகள் எழவே, மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட்ட அதேவேளையில், உள் மணிப்பூர் தொகுதியில் மட்டும் பாஜக போட்டியிட்டது. வெளி மணிப்பூர் தொகுதியில் நாகா மக்கள் முன்னணி வேட்பாளர் திமோத்திக்கு பாஜக ஆதரவு அளித்தது.
இந்தநிலையில் இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிமுகத்தில் உள்ளது. உள் மணிப்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அங்கொம்ச்சா பிமோல் பாஜக வேட்பாளரை விட 105436 வாக்குகள் அதிகமாக பெற்று முன்னிலையில் உள்ளார். வெளி மணிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஆல்பிரட் கங்கம் 72019 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட இந்த இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT