Last Updated : 04 Jun, 2024 01:58 PM

 

Published : 04 Jun 2024 01:58 PM
Last Updated : 04 Jun 2024 01:58 PM

டெல்லியில் கன்னய்யாவுக்கு பின்னடைவு: இதர 6 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

கன்னைய்யா குமார்

புதுடெல்லி: டெல்லியின் வடகிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கன்னைய்யா குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதர 6 தொகுதிகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கே சாதகமான முன்னணி உள்ளது.

நாட்டின் தலைநகரான டெல்லியில் மொத்தம் 7 தொகுதிகள் உள்ளன. இவற்றின் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். பாஜகவிற்கு டெல்லியில் 2014, 2019 தேர்தலிலும் வெற்றி கிடைத்திருந்தது. எதிர்க்கட்சி கூட்டணியான இண்டியாவின் உறுப்பினர்கள் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இணைந்து போட்டியிடுகின்றன. இதில், காங்கிரஸ் 3 மற்றும் ஆம் ஆத்மி 4 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

இந்த ஏழு தொகுதிகளில் வடகிழக்கு தவிர இதர ஆறிலும் பாஜக அதன் வேட்பாளர்களை மாற்றி விட்டது. இந்த ஆறு தொகுதிகளின் பாஜக எம்பிக்களுக்கு மறுவாய்ப்பு கிடைக்கவில்லை.

பாஜகவில் மறுவாய்ப்பு பெற்ற ஒரே எம்பி, பிஹாரின் போஜ்புரி மொழி திரைப்படங்களின் பிரபல நடிகரான மனோஜ் திவாரி. இவரை வடகிழக்கு டெல்லி தொகுதியில் காங்கிரஸின் வேட்பாளர் கன்னைய்யா குமார் எதிர்த்தார். மனோஜை போல் கன்னைய்யாவும் பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கன்னைய்யாவிற்கு சுமார் 26,000 வாக்குகளில் பின்னடைவு ஏற்பட்டு வருகிறது.

மறைந்த பாஜகவின் மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சுரி ஸ்வராஜ், புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சியின் சோம்நாத் பாரதி உள்ளார். இவர் ஆம் ஆத்மியின் எம்.எல்.ஏவாக உள்ளார். தாம் தோல்வி அடைந்தால் தன் தலையை மொட்டை அடித்துக் கொள்வதாக சோம்நாத் பாரதி சவால் விடுத்துள்ளார். இதனால், அவரது தலைமுடி தப்புவது உறுதி இல்லாத நிலையில் உள்ளது.

கிழக்கு டெல்லியின் தொகுதியில் ஹர்ஷ் மல்ஹோத்ரா போட்டியிடுகிறார். இவரை ஆம் ஆத்மி கட்சியின் குல்தீப் குமார் எதிர்க்கிறார். இவர், 2019 தேர்தலிலும் ஆம் ஆத்மி சார்பில் இதே தொகுதியில் போட்டியிட்டவர்.

காங்கிரஸின் ஜெய்பிரகாஷ் அகர்வால், டெல்லியின் சாந்தினி சவுக் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். இங்கு பாஜக சார்பில் பிரவிண் கண்டல்வால் வேட்பாளராகி இருந்தார். இந்த தொகுதியில் 2019-ல் போட்டியிட்ட மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அகர்வாலை தோல்வியுறச் செய்திருந்தார்.

மேற்கு டெல்லி தொகுதியில் பாஜகவிற்காக கமல்ஜித் ஷெரவாத் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் மஹபல் மிஸ்ரா நிறுத்தப்பட்டுள்ளார். 2019 தேர்தலிலும் போட்டியிட்ட மஹபல் சர்மாவை பாஜகவின் பிரவேஷ் சிங் வர்மா வென்றிருந்தார்.

வடமேற்கு டெல்லி தொகுதியில் யோகேந்திர சண்டோலியா பாஜகவிற்காக வேட்பாளராக்கப்பட்டிருந்தார். இங்கு காங்கிரஸின் வேட்பாளராக தலித் சமூகத்தின் உதித்ராஜ் போட்டியிடுகிறார்.

கடந்த 2014 தேர்தலில் பாஜகவிலிருந்த உதித்ராஜ், 2019 தேர்தலுக்கு பின் காங்கிரஸில் இணைந்தவர். தெற்கு டெல்லி தொகுதியில் ராம்வீர் சிங் பிதூரி பாஜகவின் வேட்பாளர்.

இந்த தொகுதியில் 2019 தேர்தலில் ஆம் ஆத்மியின் ராகவ் சட்டாவை பாஜகவின் ரமேஷ் பிதூரி வெற்றி பெற்றிருந்தார். இந்த முறை தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் சாஹி ராம் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி டெல்லியின் ஏழு தொகுதிகளிலும் பாஜகவே வெற்றிபெறும் சூழல் தெரிகிறது. இங்கு மூன்றாவது முறையாக ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்கிறது.

ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஜாமீனில் வந்து பிரச்சாரம் செய்திருந்தார். இவரது பிரச்சாரமும் ஆம் ஆத்மிக்கு பலனில்லாமல் போய்விடும் போல் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x