Published : 03 Jun 2024 10:24 PM
Last Updated : 03 Jun 2024 10:24 PM
புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்கள் டெல்லியிலேயே தங்கி இருக்குமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது, மேலும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான இன்று இரவு முதல் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடைந்த பிறகு ஜூன் 5ஆம் தேதி காலை வரை டெல்லியிலே தங்கி இருக்குமாறு இண்டியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளவே இந்த அழைப்பை காங்கிரஸ் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையில் ஏதேனும் குளறுபடிகள் நடந்தால் குடியரசுத் தலைவரை சந்தித்து முறையிடவும் இண்டியா கூட்டணியினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நேற்றைய தினம் (ஜூன் 02) டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்கே, “இந்த மக்களவைத் தேர்தலில் இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். எங்கள் கூட்டணி ஒற்றுமையாக உள்ளது” என்று தெரிவித்தார்.
மேலும், வாக்கு எண்ணும் நாளில் எதிர்க்கட்சிகளின் அனைத்து வாக்குச் சாவடி முகவர்களும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், கடைசி வாக்கு எண்ணப்படும் வரை வாக்கு எண்ணும் மையங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கார்கே கேட்டுக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT