Published : 03 Jun 2024 07:33 PM
Last Updated : 03 Jun 2024 07:33 PM
புதுடெல்லி: தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் ஆகியோருக்கு, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஜி.எம்.அக்பர் அலி, அருணா ஜெகதீசன், டி.ஹரிபரந்தாமன், பி.ஆர்.சிவக்குமார், சி.டி.செல்வம், எஸ்.விமலா, பாட்னா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.
அதில் அவர்கள், "பெரும்பான்மையான மக்களின் மனதில் 'உண்மையான அச்சங்கள்' உள்ளன. மக்களின் இந்த அச்சத்தை சிவில் மற்றும் மனித உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் வெளிப்படுத்தி உள்ளனர். மக்களவைத் தேர்தல் 2024-ஐ இந்திய தேர்தல் ஆணையம் நடத்திய விதம் கவலை அளிப்பதாக உள்ளது. அதோடு, தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால், அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது. அரசியலமைப்பு நெருக்கடி ஏற்படலாம்.
முன்னாள் அரசு உயரதிகாரிகளின் அமைப்பான அரசியலமைப்பு நடத்தைக் குழு, தேர்தலின் நேர்மை குறித்து கடந்த வாரம் 'கவலை' தெரிவித்ததை நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 'தேர்தல் விதிமீறல்கள் குறித்து பொறுப்பான அமைப்புகளாலும் மரியாதைக்குரிய சமூகத்தினராலும் பலமுறை தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த காலங்களில் எந்தவொரு தேர்தல் ஆணையமும் தற்போதைய தேர்தல் ஆணையத்தைப் போல் கடமைகளை நிறைவேற்றத் தயங்கியதில்லை. இதைக் கூறுவதற்கு நாங்கள் வேதனைப்படுகிறோம்' என்று முன்னாள் அரசு உயரதிகாரிகளின் அரசியலமைப்பு நடத்தைக் குழு தெரிவித்திருந்தது.
ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகள் தொடர்பாக சமீபத்தில் சர்ச்சை எழுந்ததை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அதோடு, சிறுபான்மையினர் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு எதிரான ஆளும் கட்சித் தலைவர்களின் வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிராக குறைந்தபட்ச நடவடிக்கை மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.
எந்த தரப்புக்கும் பெரும்பான்மை கிட்டாமல் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால், குடியரசுத் தலைவரின் தோள்களில் கடுமையான பொறுப்புகள் சுமத்தப்படும். அதிக எண்ணிக்கையிலான இடங்களைப் பெற்ற தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை முதலில் அழைப்பது என்ற நிறுவப்பட்ட ஜனநாயக முன்மாதிரியை அவர் பின்பற்றுவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். மேலும், அவர் குதிரை பேரத்தின் சாத்தியக்கூறுகளை முன்கூட்டியே தடுக்க முயற்சிப்பார்.
அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கவும், சாத்தியமான பேரழிவைத் தடுக்கவும், போட்டியிடும் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை எண்ணும்போதும், முடிவுகளை அறிவிக்கும்போதும் ஏதேனும் பயங்கரமான சூழ்நிலைகள் ஏற்படுமானால் அவற்றை தடுக்கவும், தீவிர நடவடிக்கை எடுக்கவும் உச்ச நீதிமன்றம் தயாராக இருக்க வேண்டும். "அரசியலமைப்பு நெருக்கடி" ஏற்படுமானால் அதை எதிர்கொள்ள முதல் ஐந்து நீதிபதிகள் தயார் நிலையில் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எங்கள் அச்சங்கள் தவறானவையாக இருக்க வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். வாக்குகள் எண்ணப்பட்டு, நியாயமான மற்றும் நேர்மையான முறையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, மக்கள் ஆணைப்படி அதிகார மாற்றம் சுமுகமாக முடிவடைய வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT