Published : 03 Jun 2024 01:57 PM
Last Updated : 03 Jun 2024 01:57 PM

கருணாநிதியின் உருவப்படத்துக்கு இண்டியா கூட்டணி தலைவர்கள் அஞ்சலி @ புதுடெல்லி

புதுடெல்லி: மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஃபரூக் அப்துல்லா, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட இண்டியா கூட்டணியின் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மறைந்த திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு. கருணாநிதியின் 101வது பிறந்த தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் உருவப்படத்துக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, சிபிஐ பொதுச் செயலாளர் டி. ராஜா, சிபிஎம் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, திமுக மூத்த தலைவர்கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா காந்தி, “பல சந்தர்ப்பங்களில் அவரைச் சந்தித்து அவருடைய அனுபவ வார்த்தைகளைக் கேட்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்தது. அவரது அறிவுரைகளால் பலனடைந்திருக்கிறேன்” என தெரிவித்தார்.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, “தன் எண்ணங்களாலும் செயல்களாலும் தேசத்திற்கு சேவை செய்த இந்தியாவின் மகத்தான புதல்வர் கருணாநிதி. தன் வாழ்நாள் முழுவதும் தேசத்தின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர். தமிழகம் மட்டுமல்லாது தேசத்தைப் பற்றி சிந்தித்தவர். அவருடன் ஒரு சிறந்த உறவு எனக்கு இருந்தது. அந்த பெரியவரின் ஆன்மா சாந்தியடையட்டும்” என கூறினார்.

கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி, "தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்தநாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள். தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர் அவர். சமூக நீதியை மேம்படுத்துதல், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுதல் மற்றும் தமிழ் மக்களின் மொழி மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக பாடுபட்டவர். நாடு முழுவதும் உள்ள எண்ணற்ற மக்கள் மீது அவரது வாழ்க்கை நீடித்த முத்திரையை பதித்துள்ளது” என தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x