Published : 02 Jun 2024 04:08 PM
Last Updated : 02 Jun 2024 04:08 PM

தேர்தல் முறைகேட்டை நியாயப்படுத்தும் முயற்சியே ‘எக்ஸிட் போல்ஸ்’: காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஜெய்ராம் ரமேஷ் | கோப்புப்படம்

புதுடெல்லி: தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் போலியானவை என்று தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவை தேர்தல் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சி என்று குற்றம்சாட்டியுள்ளது.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ், "அரசாங்கத்தின் அடுத்த 100 நாட்களுக்கான வேலைத் திட்டம் குறித்து பிரதமர் மோடி ஆய்வு நடத்துவதற்கு காரணம் இருக்கிறது. இவை அனைத்தும், நான் திரும்பி வருகிறேன், நான் மீண்டும் பிரதமராகப் போகிறேன் எனக்கூறும் ஒரு வகையான உளவியல் ரீதியிலான விளையாட்டு. அவர் நாட்டின் நிர்வாக அமைப்புக்கும், அரசு அதிகாரிகளுக்கும் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறார்.

வாக்கு எண்ணிக்கையை நியாயமாக நடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் பயப்படமாட்டார்கள் என்று நம்புகிறோம். இந்த தந்திர அழுத்தங்களுக்கு யாரும் அச்சப்பட வேண்டாம். சனிக்கிழமை வெளியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் முற்றிலும் போலியானவை. ஜூன் 4ம் தேதி வெளியேற உள்ள ஒரு மனிதரின் தந்திரம் அது.

இவையெல்லாம், பதவியில் இருந்து வெளியேறப்போகும் பிரதமர் (நரேந்திர மோடி) மற்றும் உள்துறை அமைச்சரின் (அமித் ஷா) உளவியல் விளையாட்டுக்களின் ஒரு அங்கம். வெளியேறப்போகும் உள்துறை அமைச்சர் நேற்று 150 மாவட்ட ஆட்சியர்களை அழைத்துப் பேசியுள்ளார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் உண்மையுடன் ஒத்துப்போகவில்லை. கருத்துக்கணிப்பில், என்டிஏ கூட்டணி சில இடங்களில் அங்கு இருக்கும் மொத்த இடங்களை விட அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இண்டியா கூட்டணிக் கட்சிகள் கூடி பேசினோம். நாங்கள் மாநில வாரியாக பகுப்பாய்வு செய்தோம். இண்டியா கூட்டணி 295 இடங்களுக்கு குறையாமல் வெற்றி பெறும்.

இந்தக் கருத்துக்கணிப்புகள் எல்லாம் மோசடியை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியே. இது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முறைகேடுகளை நியாயப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட முயற்சியாகும். மேலும் காங்கிரஸ் மற்றும் இண்டியா கூட்டணி கட்சித் தொண்டர்களின் மன உறுதியை குலைப்பதற்கான முயற்சியுமாகும்.

நாங்கள் பயப்படப்போவதில்லை. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு ஜூன் 4ம் தேதி வெளியாகும் உண்மையைான தேர்தல் முடிவுகளில் இருந்து மாறுபட்டு இருக்கும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள். இவை அரசியல் கருத்துக்கணிப்புகள், தொழில்முறை கருத்துக்கணிப்புகள் இல்லை.

காங்கிரஸ் பொருளாளரும், கட்சியின் மூத்த தலைவருமான அஜய் மக்கான், வாக்கு எண்ணும் போது, உதவி தேர்தல் அதிகாரியின் மேஜைக்கு அருகில் கட்சியின் முகவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்ற விஷயத்தை தேர்தல் ஆணையத்திடம் எழுப்பியுள்ளார். அவர்களிடமிருந்து சில பதில்கள் வந்துள்ளன. வேட்பாளர்கள் வெளிப்படுத்திய நியாயமான அச்சத்தின் அடிப்படையிலேயே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி இந்த 77 நாட்களில் 117 புகார்களை அளித்துள்ளோம். அதில் 14 புகார்கள் பிரதமருக்கு எதிரானவை.

ஆனால் தேர்தல் ஆணையத்திடமிருந்து நம்பகமான பதில்கள் வரவில்லை. அது ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். அதன் முக்கிய வேலை குறித்த நம்பிக்கையை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். அனைத்துக் கட்சிகளும் அணுகக்கூடிய வகையிலும், பாஜகவின் நீட்டிக்கப்பட்ட அங்கமாக செயல்படாமலும் தேர்தல் ஆணையம் இருக்கும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப் பெரிய ஜனநாயகத் திருவிழாவான 2024 மக்களவைத் தேர்தல் நேற்று நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நேற்று வெளியாகின. அதன்படி, பாஜக கூட்டணி 350+ இடங்களிலும், இண்டியா கூட்டணி 130+ இடங்களிலும், இதரக் கட்சிகள் 40+ இடங்களிலும் வெற்றி பெற சாத்தியக் கூறு இருப்பதாக கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்தன. பெரும்பான்மைக்கு 272 தொகுதிகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. 7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் வரும் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x