Published : 02 Jun 2024 12:54 PM
Last Updated : 02 Jun 2024 12:54 PM
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று திஹார் சிறையில் சரணடைகிறார். முன்னதாக, மகாத்மா காந்தியின் நினைவிடம் மற்றும் அனுமன் கோயிலுக்குச் செல்ல உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், மக்களவைத் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனில் மே 10 அன்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. இடைக்கால ஜாமின் முடிவடையும் தருவாயில் அவர் மீண்டும் மருத்துவக் காரணங்களுக்காக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். எனினும், அந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
இடைக்கால ஜாமின் காலம் முடிவடைந்ததை அடுத்து இன்று மீண்டும் அவர் சிறை செல்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மாண்புமிகு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நான் 21 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறையில் இருந்து வெளியே வந்தேன். மாண்புமிகு உச்ச நீதிமன்றத்திற்கு மிக்க நன்றி. இன்று நான் திஹார் சென்று சரணடைவேன். மதியம் 3 மணிக்கு வீட்டிலிருந்து புறப்படுவேன். முதலில் ராஜ்காட் சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அங்கிருந்து கன்னாட் பிளேஸில் உள்ள ஹனுமான் கோவிலுக்குச் சென்று அனுமனிடம் ஆசி பெறுவேன். அங்கிருந்து கட்சி அலுவலகத்துக்குச் சென்று, தொண்டர்கள் மற்றும் தலைவர்களை சந்தித்துப் பேசுவேன்'' என தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் "நீங்கள் அனைவரும் உங்களை கவனித்துக் கொள்ளுங்கள். நான் உங்களைப் பற்றி கவலைப்படுவேன். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால் உங்கள் கெஜ்ரிவாலும் சிறையில் மகிழ்ச்சியாக இருப்பார். ஜெய் ஹிந்த்," என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT