Published : 01 Jun 2024 08:36 AM
Last Updated : 01 Jun 2024 08:36 AM

ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்: வாக்களித்த பின்னர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை

கோரக்பூர்: மக்களவை இறுதி கட்டத் தேர்தலில் வாக்களித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், “ஜூன் 4-ல் மீண்டும் மோடி ஆட்சி அமையும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஜூன் 1) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கோரக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “இது இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா. இன்று உபி.,யின் 13 தொகுதிகள் உள்பட 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் முன்னால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களின் கருத்துகளை முன்வைத்துள்ளன. தேர்தலில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு முழுவதும் எங்களுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்க்கும் போது ஜூன் 4 எங்களுக்கு நம்பிக்கை அளிக்கும் நாளாக தெரிகிறது. அன்றைய தினம் மீண்டும் மோடி ஆட்சி அமையும்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2.5 மாதங்களாக பரபரப்பாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்தார். அவருடைய ஒட்டுமொத்த வாழ்க்கையும் இந்தியாவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவர் இந்தியப் பிரதமராக 10 ஆண்டுகள் சேவை செய்துள்ளார். உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை அவர் உயர்த்தியுள்ளார்.
பிரதமரின் தற்போதைய தியானம் தேசத்துக்கானது. ஊழல், முறையற்ற நடத்தைகளில் ஈடுபடுவோருக்கும் அதன் முக்கியத்துவம் புரியாது. அதனைப் புரிந்து கொள்ள இந்தியா மீது, இந்தியாவின் மதிப்பீடுகள் மீது நம்பிக்கை வேண்டும்.” என்றார்.

மோடி முதல் கங்கனா வரை.. உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம்சார்பில் மத்திய அமைச்சர் அனுபிரியா,மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பரில் அபிஷேக் பானர்ஜி (திரிணமூல்), பிஹாரின் பாடலிபுத்ராவில் லாலுமகள் மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் மாநில அமைச்சர் விக்ரமாதித்யா (காங்கிரஸ்), பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), ஹமீர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (பாஜக) என 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மக்களவை இறுதிக்கட்டத் தேர்தலுடன் ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு இறுதி கட்டமாக 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x