Published : 01 Jun 2024 05:39 AM
Last Updated : 01 Jun 2024 05:39 AM

8 மாநிலங்களில் இறுதிகட்ட மக்களவை தேர்தல்: 57 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி இமாச்சலின் ஸ்பிதி பள்ளத்தாக்கு, தாஷிகாங் பகுதியில் உள்ளது. அங்கு வாக்காளர்கள் புகை ப்படம் எடுத்துக்கொள்ளும் விதமாக நேற்று ‘செல்பி பாயின்ட்' கம்பம் நிறுவப்பட்டது.

புதுடெல்லி: நாடு முழுவதும் 8 மாநிலங்களில் உள்ள57 தொகுதிகளில் இறுதி கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. பிரதமர் மோடி உட்பட 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்தஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 ஆகியதேதிகளில் 6 கட்டமாக 485 தொகுதிகளில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும்பாஜக வேட்பாளர் முகேஷ் தலால்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் இறுதி மற்றும் 7-ம் கட்ட மக்களவை தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி, உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9,பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3, சண்டிகர் 1என மொத்தம் 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின் மிர்சாபூரில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம்சார்பில் மத்திய அமைச்சர் அனுபிரியா,மேற்கு வங்கத்தின் டயமண்ட் ஹார்பரில் அபிஷேக் பானர்ஜி (திரிணமூல்), பிஹாரின் பாடலிபுத்ராவில் லாலுமகள் மிசா பார்தி (ஆர்ஜேடி), இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் மாநில அமைச்சர் விக்ரமாதித்யா (காங்கிரஸ்), பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), ஹமீர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (பாஜக) என 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்றைய தேர்தலில் வாக்களிக்க 5.24 கோடி ஆண்கள், 4.82 கோடி பெண்கள், 3,574 மூன்றாம் பாலினத்தவர் எனமொத்தம் 10.06 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கிறது. அங்கு இறுதி கட்டமாக 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை: இன்று மாலையுடன் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைகிறது. அதைத் தொடர்ந்து, பல்வேறு ஊடகங்கள் சார்பில் கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்படும். இதன்மூலம் தேர்தல் முடிவுகள் குறித்து ஓரளவுக்கு ஊகிக்க முடியும்.

7 கட்ட தேர்தல்களில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்படுகின்றன. எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்பது மாலைக்குள் தெரிந்துவிடும்.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலும் நடந்துள்ளது.

இதில், சிக்கிம், அருணாச்சல் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் ஜூன் 2-ம் தேதி (நாளை) முடிவுக்கு வருவதால், நாளையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இங்கு மக்களவை தேர்தல் வாக்குஎண்ணிக்கை ஜூன் 4-ம் தேதிதான் நடைபெறும். அதேபோல, ஆந்திரா, ஒடிசா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளும் ஜூன் 4-ம் தேதி வெளியாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x