Published : 01 Jun 2024 06:22 AM
Last Updated : 01 Jun 2024 06:22 AM

வட மாநிலங்களில் வெப்ப அலை தாக்கம்: பிஹாரில் 8 தேர்தல் அலுவலர்கள் உட்பட 18 பேர் உயிரிழப்பு

பாட்னா: பிஹாரில் வெப்ப அலை வீசி வருவதால் கடந்த 48 மணி நேரத்தில் பணியில் இருந்த 8 தேர்தல் அதிகாரிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இதுகுறித்து சுகாதார அதிகாரிகள் கூறுகையில், “மாநிலத்தில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரோஹ்தாஸ் மாவட்டத்தில் மட்டும் அதிகவெப்பத்தின் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், போஜ்பூரைச் சேர்ந்த 6 பேரும், பக்சரில்ஒருவரும் வெப்ப அலைக்கு பலியாகியுள்ளனர்.

ரோஹ்தாஸில் இறந்த11 பேரில் 5 பேர் தேர்தல் அலுவலர்கள் ஆவர். மேலும் போஜ்பூரில் இரு தேர்தல் அதிகாரிகளும் பக்சரில் ஒரு தேர்தல் அதிகாரியும் வெப்பத்தின் தாக்கத்துக்கு உயிரிழந் துள்ளனர்’’ என்றனர்.

கடந்த வியாழக்கிழமை பிஹார் மாநிலத்தின் பல இடங்களில் பகல் பொழுது வெப்ப நிலை 44 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவானது. குறிப்பாக, பக்சரில் அதிகபட்சமாக 47.1 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைபதிவானது.

ஒடிசா மாநிலம் முழுவதும் வெப்ப அலை வீசி வருவதால் கடந்த வியாழக்கிழமை ஒரே நாளில் 10 பேர் பலியாகியுள்ளனர்.

இதுகுறித்து ரூர்கேலா அரசுமருத்துவமனை காண்காணிப்பாளர் சுதாராணி பிரதான் கூறுகையில், “இறந்தவர்களில் சிலருக்கு 103 டிகிரி முதல் 105 டிகிரி பாரன்ஹீட்வரை வெப்ப நிலை இருந்தது. பிரேதப் பரிசோதனைக்கு பிறகேஇறப்புக்கான காரணம் தெரியவரும்’’ என்றார்.

நாக்பூரில் 132.8 டிகிரி: வட மாநிலங்களில் கடந்த சிலவாரங்களாக கடும் வெயில் பதிவாகிஇருந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று 56 டிகிரி செல்சியஸாக (132.8 டிகிரி பாரன்ஹீட்) வெயில் பதிவாகியுள்ளது. இது நாட்டிலேயே பதிவாகியுள்ள அதிகபட்ச வெயிலாகும்.

மகாராஷ்டிராவிலுள்ள நாக்பூரில் நேற்று 56 டிகிரி செல்சியஸாக வெயில் பதிவானது. நாக்பூரிலுள்ள முங்கேஷ்வர் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் நவோதயா வித்யாலயா தானியங்கி சீதோஷ்ண நிலையத்தில்தான் இந்த வெப்ப நிலை பதிவாகியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே நாக்பூரில் அதிக அளவில் வெயில் பதிவாகியிருந்த நிலையில் நேற்று 56 டிகிரி செல்சியஸ் பதிவாகி உச்சத்தைத் தொட்டது. இது நாட்டிலேயே பதிவாகியுள்ள அதிகபட்ச வெயிலாகும்.

நாக்பூருக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள சோனேகான் பகுதியில் உள்ள வெப்பநிலை அளவீடு மையத்தில் 54 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதேபோல் டெல்லி முங்கேஷ்பூர் பகுதியில் நேற்று வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. டெல்லி நேற்று 52.9 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை பதிவானது. நேற்று முன்தினம் இதே பகுதியில் வெப்பநிலை 52.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது.

இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய வட்டாரங்கள் கூறும்போது, “நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை பதிவுக்காக சென்சார்களை அமைத்துள்ளோம். இந்த சென்சார்கள் தரும்அளவீடுகளின் துல்லியம் குறித்துசந்தேகம் உள்ளது. இதுதொடர்பாகவானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

சென்சாரில் ஏற்பட்ட பிழை களால் கூட அதிக அளவிலான வெப்பத்தைக் காட்டியிருக்கலாம். இதுதொடர்பான தகவல்களையும், சென்சார்களையும் ஆய்வு செய்து வருகிறோம்’’ என்று தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x