Published : 31 May 2024 08:04 PM
Last Updated : 31 May 2024 08:04 PM

சவாலாக வெயில், மழை - 57 தொகுதிகளில் சனிக்கிழமை இறுதிகட்ட வாக்குப்பதிவு 

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின் இறுதி கட்டமான 7-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை (சனிக்கிழமை ) நடைபெறுகிறது. பிஹார், இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், சண்டிகர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஒடிசா மாநில சட்டப்பேரவையின் மீதமுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை வாக்குப்பதிவு நடைபெறும்.

கடந்த மாதம் 19-ஆம் தேதி தொடங்கிய உலகின் மிகப் பெரிய தேர்தல் நடைமுறையில் 6 கட்டங்கள் ஏற்கெனவே நிறைவடைந்துள்ளன. இதில் 486 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இதுவரை நடைபெற்ற 6 கட்ட தேர்தலில் வாக்குப்பதிவு சுமுகமாகவும், அமைதியாகவும் நடந்து முடிந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் ஏழுகட்டங்களிலும் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி செவ்வாய்கிழமை நடைபெறும்.

நாளை நடைபெறவுள்ள இறுதி கட்ட வாக்குப்பதிவுக்கான இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு வசதியான மற்றும் பாதுகாப்பான சூழலில் நடைபெறுவதை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிழல்தரும் பந்தல், குடிநீர், சாய்வுதளம், கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் உரியமுறையில் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் தெற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அதேபோல், தென் தமிழகம், கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வியாழக்கிழமை தொடங்கியது இந்த ஆண்டு வழக்கத்தைவிட அதிகமாகவே மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சவாலான தட்ப வெப்ப சூழலுக்கு இடையே மக்களவைத் தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வெப்பம் அல்லது மழை அதிகம் இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அதற்கேற்ப ஏற்பாடுகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், கடந்த 6 கட்ட வாக்குப்பதிவின் போது, வாக்குச்சாவடிகளுக்கு வாக்காளர்கள் அதிக அளவில் வந்து வாக்களித்துள்ளனர். கடந்த இரண்டு கட்ட தேர்தல்களில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். 7-வது கட்ட தேர்தல் தொடர்பான சில தகவல்கள்:

  • 2024 பொதுத் தேர்தலின் ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு 57 மக்களவைத் தொகுதிகளுக்கு நடைபெறும். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கும். வாக்குப்பதிவு முடியும் நேரம் தொகுதிக்கேற்ப சில இடங்களில் மாறுபடும்.
  • ஒடிசா சட்டப்பேரவையின் எஞ்சியுள்ள 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை தேர்தல் நடைபெறும்.
  • இறுதிகட்ட தேர்தலுக்காக 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இறுதி கட்டத் தேர்தல் தொடர்பான பணிகளில் 10.9 லட்சம் பணியாளரக்ள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • வாக்களிக்க 10.06 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 5.24 கோடி பேர் ஆண்கள் 4.82 கோடி பேர் பெண்கள். 3574 பேர் மூன்றாம் பாலினத்தவர்.
  • இறுதி கட்ட தேர்தலுக்காக மொத்தம் 172 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே தொகுதிகளுக்கு சென்று பணிகளை கவனித்து வருகின்றனர்.
  • இறுதி கட்ட தேர்தல் பணியில் 2707 பறக்கும் படைகள், 2799 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 1080 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 560 வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • 201 சோதனைச் சாவடிகள் மூலம் சர்வதேச எல்லைகளும் 906 சோதனைச் சாவடிகள் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
  • முதியோர், மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்து வாக்காளரும் எளிதாக வாக்களிக்கும் வகையில் குறைந்தபட்ச வசதிகள் வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ளன.
  • பதிவு செய்யப்பட்ட அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி விவரங்கள் மற்றும் வாக்குப்பதிவு தேதி ஆகியவற்றை இந்த இணையதள இணைப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம் https://electoralsearch.eci.gov.in/
  • வாக்குச் சாவடிகளில் அடையாள சரிபார்ப்புக்காக வாக்காளர் அடையாள அட்டை (EPIC) தவிர 12 மாற்று ஆவணங்களின் பட்டியலையும் ஆணையம் வெளியிட்டுள்ளது. ஒரு வாக்காளர் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டிருந்தால், இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பிப்பதன் மூலம் வாக்களிக்கலாம்.
  • மாற்று அடையாள ஆவணங்களுக்கான தேர்தல் ஆணைய உத்தரவுக்கான இணையதள இணைப்பு: https://tinyurl.com/43thfhm9
  • வாக்குப்பதிவு நாளன்று வாக்குப்பதிவு சதவீதம் அவ்வப்போது வெளியிடப்படும். வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன் இரவில் முழுமையான மற்றும் துல்லியமான வாக்குப்பதிவு சதவீதம் வெளியிடப்படும். வோட்டர் டர்ன்அவுட் (voterturnout) மொபைல் செயலியில் அனைத்துக் கட்டங்களின் வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பான விவரங்கள் இடம்பெற்றுள்ளன என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x