Published : 31 May 2024 05:53 PM
Last Updated : 31 May 2024 05:53 PM

பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க எஸ்டிஐ-க்கு அனுமதி!

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹசன் தொகுதி எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணாவை 6 நாள் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு (எஸ்ஐடி) பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

முன்னதாக, பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். பெங்களூரு விமான நிலையத்தில் அவரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் அவரிடம் சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின் அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர். தொடர்ந்து அவர் மக்கள் பிரதிநிதிகள் வழக்குகளை விசாரிக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது சிறப்பு புலனாய்வு குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பிரஜ்வல் ரேவண்ணாவால் அவரின் வீட்டு பணிப்பெண் உட்பட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. வழக்கில் இருந்து தப்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு பாஸ்போர்ட் மூலம் வெளிநாடு தப்பிச் சென்றார். இந்த வழக்கில் விசாரணைக்காக அவரை 14 நாட்கள் காவலில் எடுக்க அனுமதி தர வேண்டும்" என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாதாடினார்.

அதேநேரம், பிரஜ்வல் ரேவண்ணா சார்பாக வாதிட்ட வழக்கறிஞர், "இது முழுவதுமாக ஜோடிக்கப்பட்ட வழக்கு. பிரஜ்வல் மீது திட்டமிட்டு பாலியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சொல்லப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு தகுந்த ஆதாரங்கள் இல்லை. மேலும், புகார் அளித்த பெண்ணின் அங்க அடையாளங்கள் வீடியோவில் இல்லை. எனவே, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கூடாது" என்று கூறினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட பிறகு, பிரஜ்வல் ரேவண்ணாவை ஆறு நாள் காவலில் விசாரிக்க அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் சிறையில் வைத்து சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது.

சட்டப்படி நடவடிக்கை: இதற்கிடையே, பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, “பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனியில் இருந்து நள்ளிரவு 12.50 மணிக்கு வந்தார். முன்னதாக, பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், எஸ்ஐடி அவரை காவலில் எடுத்துள்ளது. ரேவண்ணாவால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் யாரேனும் இருப்பின் தாமாக முன்வந்து புகாரளிக்குமாறு முன்பே கூறியுள்ளோம். இந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக எனக்கு இன்னும் அதிக தகவல் தெரியவில்லை. பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வார்கள். மேலும், அதிகாரிகளுக்கு ரேவண்ணா தேவையான ஒத்துழைப்பை அளித்து வருவதாகத் தெரிகிறது. அதிகாரிகள் தற்போது அவரை காவலில் வைத்துள்ளனர்” எனத் தெரிவித்தார்.

பெண் காவலர்களால் கைது: பிரஜ்வல் ரேவண்ணா இன்று அதிகாலை ஜெர்மனியில் இருந்து விமானம் மூலம் இந்தியா திரும்பினார். ஜெர்மனியில் இருந்து லுஃப்தான்ஸா விமானம் LH0764 மூலம் நாடு திரும்பிய அவர் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்ய மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் இருவர் தலைமையில் 5 பெண் காவலர்கள் கொண்ட பிரத்யேக குழுவை சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிவைத்தது.

பெண் ஐபிஎஸ் அதிகாரிகளான சுமன் டி பென்னேகர் மற்றும் சீமா லட்கர் தலைமையிலான மகளிர் காவலர்களே பெங்களூரு விமான நிலையத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். தொடர்ந்து பெண் காவலர்கள் அடங்கிய குழுவே அவரை விசாரணைக்கும் அழைத்துச் சென்றது. பெண் காவலர்களை திட்டமிட்டே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய அனுப்பியதாக சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

"பெண் அதிகாரிகளை பிரஜ்வலை கைது செய்ய அனுப்ப வேண்டும் என்பது ஒரு திட்டமிட்ட நிகழ்வு. ஏனென்றால், பிரஜ்வல் தனது அதிகாரத்தை பெண்களுக்கு எதிராக பயன்படுத்தினார். அதே பெண்களுக்கு அவரை கைது செய்ய அதிகாரம் உள்ளது என்ற செய்தியை உணர்த்துவதற்கும், பெண்கள் யாருக்கும் பயப்பட மாட்டார்கள் என்பதை சொல்வதற்கும் அவரை திட்டமிட்டே பெண் காவல் அதிகாரிகளை வைத்து கைது செய்தோம்" என்று சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னணி: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப் பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

இதனிடையே தலைமறைவான ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றது தெரிந்தது. அவர் தாயகம் திரும்ப கட்சி, குடும்பம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், ‘‘மே 31-ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்'' என தெரிவித்திருந்தார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. அதை நிரூப்பிப்பேன் என்று கூறியதோடு குடும்பத்தினரிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x