Published : 31 May 2024 02:59 PM
Last Updated : 31 May 2024 02:59 PM

வட இந்தியாவில் வெப்ப அலையால் 54 பேர் உயிரிழப்பு: டெல்லியில் புழுதிப் புயல் வீச வாய்ப்பு

புகைப்படம்: பிஸ்வாரஞ்சன்

புதுடெல்லி: வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், வடக்குப் பகுதிகளில் கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. தலைநகர் டெல்லியில் வரலாற்றில் முதல்முறையாக 126.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாட்டிலேயே உச்சபட்ச வெப்பஅலை டெல்லியில் வீசி வருவதாக வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில், வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் வீசி வரும் வெப்ப அலைகளால் இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

அவுரங்காபாத்தில் 17 பேர், ஒடிசாவில் ரூர்கேலாவில் 10 பேர், அர்ராவில் 6 பேர், கயா மற்றும் ரோஹ்தாஸில் தலா 3 பேர், பக்சரில் 2 பேர், பாட்னாவில் ஒருவர், ஜார்கண்ட் மாநிலம் பலமு மற்றும் ராஜஸ்தானில் தலா 5 பேரும், உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூரில் ஒருவர், டெல்லியில் ஒருவர் என மொத்தமாக 54 பேர் கடுமையான வெப்பத்தின் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று ராஜஸ்தான், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், ஒடிசா, கிழக்கு மத்தியப் பிரதேசம் மற்றும் விதர்பாவின் பல பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 45-48 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவானது. தொடர்ந்து வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதன்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பிஹார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இன்றும், நாளையும் (மே 31, ஜூன் 1) கடுமையான வெப்ப அலை வீசக்கூடும். மேலும், உத்தரப் பிரதேசத்தில் இன்றும், நாளையும் (மே 31, ஜூன் 1), ஹரியானா, சண்டிகர் மற்றும் டெல்லியில் இன்றும் புழுதிப் புயல் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

அதேநேரம், ஜூன் 2ம் தேதி வரை வடமேற்கு இந்தியாவின் சமவெளிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாநிலங்களில் பருவமழை: வழக்கத்துக்கு மாறாக இரண்டு நாட்கள் முன்னதாகவே கேரளாவில் நேற்று (மே.30) தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இது வடக்குநோக்கி நகர்ந்து வடகிழக்கு மாநிலங்களான அசாம், மேகாலயா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் பருவமழையாக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், லட்சத்தீவு, கர்நாடகா, தமிழகம் ஆகிய பகுதிகளில் அடுத்த சில நாட்களில் பருவமழை பொழியும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x