Published : 31 May 2024 12:15 PM
Last Updated : 31 May 2024 12:15 PM

டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு: உச்ச நீதிமன்றத்தை நாடிய ஆம் ஆத்மி அரசு

கோப்புப்படம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த சூழலில் அங்கு கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது டெல்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி அரசு.

டெல்லி அரசு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தரப் பிரதேசம், இமாச்சலில் இருந்து கூடுதலாக நீர் திறக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் பாகுபாடுகளை புறந்தள்ளிவிட்டு பாஜகவினரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என முதல்வர் கேஜ்ரிவால் கேட்டுக் கொண்டுள்ளார்.

“கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தண்ணீரின் தேவை அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து டெல்லி பெறுகின்ற நீரின் அளவு குறைந்துள்ளது. அதனால் தண்ணீரின் தேவை கூடியும், விநியோகம் குறைந்தும் உள்ளது. இதற்கு நாம் அனைவரும் ஒன்று கூடி தேர்வு காண வேண்டும். பாஜக நண்பர்கள் போராட்டம் மேற்கொண்டு வருகிறார்கள். இது இந்த சிக்கலுக்கு தீர்வு தராது.

இந்த நேரத்தில் அரசியல் ஆதாயம் பெறுவதை காட்டிலும் மக்களின் நலனுக்காக கூடி பணியாற்ற அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன். பாஜக ஆட்சி செய்யும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேச அரசுடன் பேசி கூடுதலாக ஒரு மாத காலம் நீர் திறக்க சொல்ல வேண்டும். அது நடந்தால் டெல்லி மக்கள் பாஜகவின் செயலை பாராட்டுவார்கள்” என டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி அரசின் போர்க்கால நடவடிக்கையை தாண்டியும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். “எங்கள் பகுதிக்கு ஒரே ஒரு டேங்கர் லாரி தான் தண்ணீருடன் வருகிறது. அது எங்களுக்கு போதவில்லை. நாங்கள் ரூ.20 கொடுத்து தண்ணீர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளோம். பல முறை அரசுக்கு மனு எழுதியும் பலன் இல்லை. ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் நடவடிக்கை எதுவும் எடுப்பதில்லை. ஏழைகளின் குரல் யாருக்கும் கேட்பதில்லை” என கிழக்கு டெல்லியின் கீதா காலனி பகுதியில் வசித்து வரும் ருதால் சொல்கிறார்.

அரசின் தண்ணீர் டேங்கர் எங்கள் பகுதிக்கு வர 20 நாட்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. தனியார் டேங்கருக்கு ரூ.1800 முதல் ரூ.2000 வரை செலுத்த வேண்டி உள்ளது என தெற்கு டெல்லியின் ராஜு பார்க் பகுதியில் வசிக்கும் புஷ்பா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x