Published : 31 May 2024 09:22 AM
Last Updated : 31 May 2024 09:22 AM

பிரஜ்வல் ரேவண்ணா கைது: அடுத்தது என்ன? - இன்று சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை

பெங்களூரு: பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா இன்று (வெள்ளிக்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக நேற்று, அவர் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் மக்களவை தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார். அங்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், அவர் பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் வீடியோக்கள் வெளியானது. மேலும் அவருடைய வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 4 பாலியல் வன் கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன‌.

இதனிடையே தலைமறைவான ரேவண்ணா ஜெர்மனி தப்பிச் சென்றது தெரிந்தது. அவர் தாயகம் திரும்ப கட்சி, குடும்பம் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், ‘‘மே 31-ம் தேதிகாலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்'' என தெரிவித்திருந்தார். மேலும் தன் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. அதை நிரூப்பிப்பேன் என்று கூறியதோடு குடும்பத்தினரிடமும், மக்களிடமும் மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்நிலையில், ஜெர்மனியில் இருந்து . லுஃப்தான்ஸா விமானம் LH0764 மூலம் நாடு திரும்பிய அவர் நேற்று (வியாழன்) நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவரைக் கைது செய்ய மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் 5 பெண் காவலர்கள் கொண்ட பிரத்யேக குழுவை சிறப்பு புலனாய்வுக் குழு அனுப்பிவைத்தது.

கைது செய்யப்பட்ட ரேவண்ணா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு முன்னதாக அவர் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு ஆஜராவார் என்றும் தெரிகிறது. இதற்கிடையில் அவர் தரப்பில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனு அவசர வழக்காக விசாரணைக்கு வருகிறது.

முன்னதாக நேற்று ‘ஹசன் சலோ; என்ற போராட்டத்தை ஹசன் மாவட்டத்தின் கர்நாடகா மக்கள் இயக்கம் அமைப்பு முன்னெடுத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x