Published : 30 May 2024 08:02 PM
Last Updated : 30 May 2024 08:02 PM
கொச்சி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துவரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி கொச்சி நகரம் தத்தளித்து வருகிறது.
மே 31-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாக இன்று வியாழக்கிழமை கேரளாவில் பருவமழை தொடங்கியது. இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தவரை கனமழை பெய்த நிலையில், நேற்று முன்தினம் எர்ணாகுளம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. கொச்சியில் மேகவெடிப்பு காரணமாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், 1.30 மணி நேரத்தில் 98.4 மி.மீ மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த இரண்டு நாட்களாக கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள 14 நிலையங்களில் 2.5 மிமீக்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து அங்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மாநிலத்தின் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட், மீதமுள்ள 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலை முதல் எர்ணாகுளம், பரவூர் மற்றும் கொச்சியில் விட்டுவிட்டு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. கொச்சி போன்ற நகரங்களில் பெய்துள்ள மழையால் நகரின் பல இடங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இதனால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். சில இடங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து வருகிறது. குறிப்பாக கொச்சியை சுற்றியுள்ள களமச்சேரி, அங்கமாலி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளன.
கொச்சி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலைய பாதைகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வெள்ளம் சூழ்ந்த சாலைகளில் கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் மெதுவாக நகர்ந்து வருகின்றன.
இதேபோல், எர்ணாகுளம், ஆலப்புழா, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் ஏராளமான மக்கள் நிவாரண முகாம்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். பல இடங்களில் வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் விநியோகம் தடைபட்டது.
இருவர் மரணம்: இரு தினங்களாக பெய்த மழையின் காரணமாக சேர்தலா மற்றும் கொல்லத்தில் இருவர் பலியாகினர். மேலும், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஐந்து நிவாரண முகாம்களில் மொத்தம் 116 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மாநிலம் முழுவதும் இதுவரை 666 குடும்பங்களைச் சேர்ந்த 2,054 பேர் 34 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT