Published : 30 May 2024 03:04 PM
Last Updated : 30 May 2024 03:04 PM
புதுடெல்லி: “எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் எதுவும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். வாக்குகளைப் பெறுவதற்காகவே எனது உடல்நிலை குறித்து பாஜக வதந்தி பரப்புகிறது” என்று ஒடிசா முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், "எனக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏதும் இல்லை. நான் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கிறேன். கடந்த ஒரு மாதமாக மிகவும் வெப்பமான சூழலில் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். எனது கை ஆடுவது குறித்த வீடியோ வைரலாகி இருக்கிறது. இதனால், எந்த விதமான உடல்நிலை பாதிப்பும் இல்லை. பாஜக முதல்வர் (ஹிமந்த பிஸ்வா சர்மா) காரணம் இல்லாமல் இதனை மிகைப்படுத்தி உள்ளார்.
ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்தது குறித்து விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறி இருக்கிறார். பிரதமர் மோடிக்கு எனது உடல்நிலையில் இவ்வளவு அக்கறை இருந்தால், நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்றுதான். இது குறித்து பொதுக் கூட்டத்தில் சத்தமாகச் சொல்வதை விட, தொலைபேசியை எடுத்து என்னிடம் விசாரித்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பதற்காகத்தான் அவர் முயற்சி செய்கிறார். எனது உடல்நிலை குறித்து டெல்லியில் உள்ள சிலர், கடந்த 10 ஆண்டுகளாக வதந்தி பரப்புகிறார்கள். என் உடல்நிலை சரியாகவே உள்ளது.
முதல்வர் என்ற வகையில் நான் எடுக்க வேண்டிய முடிவுகளை என் சார்பாக வி.கே.பாண்டியன் எடுக்கிறார் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு அபத்தமானது. இது குறித்து நான் ஏற்கெனவே அடிக்கடி கூறியுள்ளேன். இது பழைய குற்றச்சாட்டு. இதற்கு எந்த வலுவும் இல்லை. முதல்வர் என்ற முறையில் என்னிடமே அனைத்து அதிகாரங்களும் உள்ளன. மாநில மக்களுக்காக பெரிய அளவிலான திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி உள்ளோம். இன்னும் நிறைய செய்ய விரும்புகிறோம். அமைச்சரவை கூட்டங்களுக்கு எப்போதும் நான் தலைமை தாங்குகிறேன். நான் தலைமை தாங்காத ஓர் அமைச்சரவை கூட்டம் கூட இல்லை.
கடந்த 27 ஆண்டுகளாக அரசியலில் உள்ளேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு கட்சியின் தலைவர் பதவி வழங்கப்பட்டது. அதன் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன். நான் முழு நேரமும் மக்களுடன் பழகுகிறேன். கடந்த ஒரு மாதமாக நான் செய்து வருவதெல்லாமே மாநில மக்களுடன் தான்.
பிஜு ஜனதா தளத்தின் மற்ற தலைவர்களை விட வி.கே.பாண்டியனை முன்னிறுத்துவதாகச் சொல்வது முட்டாள்தனமானது. எங்கள் கட்சியில் உள்ள சிறந்தவர்கள் பலர் உயர் பதவிகளில் இருக்கிறார்கள். அமைச்சர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தின் மூலம் கிடைத்திருக்கும் மிகப் பெரிய அதிகாரத்தை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரியாக இருந்த வி.கே.பாண்டியன் தனது அரசு பதவியை ராஜினாமா செய்த பிறகு, அரசியலுக்கு தான் வந்தது குறித்து அவரே விளக்கி இருக்கிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தேவைப்பட்டால் ஆதரிப்பீர்களா என்று கேட்கிறீர்கள். ஆதரவு தேவைப்படும்போது நாங்கள் எங்களின் சரியான நிலைப்பாடு குறித்து முடிவெடுப்போம். ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் மிகச் சிறந்த முடிவை மக்கள் வழங்குவார்கள் என்று எண்ணுகிறேன். ஒடிசாவில் நாங்கள் மீண்டும் உறுதியான ஆட்சியை அமைப்போம். நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெறும். பிஜேடி வெற்றி பெற்றால் 5 ஆண்டுகளும் முதல்வராக இருப்பீர்களா என்று கேட்கிறீர்கள். நிச்சயமாக இருப்பேன் என நம்புகிறேன்" என்று நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
மோடி பேசியது என்ன? - முன்னதாக, ஒடிசாவின் பாலாசோரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “கடந்த ஒரு வருடமாக ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. அவரால் எந்த ஒரு வேலையையும் சுயமாக செய்ய முடியாது என அவரோடு பணியாற்றுபவர்கள் கூறுகிறார்கள். இதற்குப் பின்னால் சதி இருக்குமோ என்றும் அவர்கள் சந்தேகிக்கிறார்கள்.
ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்றதும், ஒடிசாவைச் சேர்ந்த ஒருவரை நாங்கள் மாநிலத்தின் முதல்வராக்குவோம். அடுத்ததாக, நவீன் பட்நாயக்கின் உடல்நிலை குறித்து விசாரணை மேற்கொள்ள ஜூன் 10-க்குப் பிறகு ஒரு குழு அமைக்கப்படும். அந்தக் குழுவின் அறிக்கை பொதுமக்கள் முன்னிலையில் வெளியிடப்படும்” என்று பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
குறிவைக்கப்படும் வி.கே.பாண்டியன்: கடந்த 2011-ம் ஆண்டில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக வி.கே.பாண்டியன் பதவியேற்றார். 2012-ம் ஆண்டு மே மாதம் முதல்வர் நவீன் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்தார். அந்த நேரத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் மூத்த தலைவர் பியாரிமோகன் மகாபோத்ரா, பிஜு ஜனதா தளஆட்சியை கவிழ்க்க சதி செய்தார். இந்த சதியை பாண்டியன் வெற்றிகரமாக முறியடித்தார். அப்போதுமுதல் நவீனின் வலதுகரமானார்.
தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா உட்பட பாஜக தலைவர்கள் அனைவரும் வி.கே.பாண்டியனை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ‘தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன், மண்ணின் மைந்தர் கிடையாது. ஒடிசாவை சேர்ந்தவரே மாநில அரசியலில் ஈடுபட வேண்டும்’ என்று எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT