Published : 30 May 2024 10:37 AM
Last Updated : 30 May 2024 10:37 AM
ஏழாவது மற்றும் இறுதி கட்ட மக்களவைத் தேர்தல் களத்தில் மொத்தம் 299 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர். இதில் முன்னாள் மத்திய அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் பாதல் ரூ.198 கோடி சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வரும் ஜூன் 1-ம் தேதி 7-வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் 57 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 904 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் உள்ளனர். இதில் 299 பேர் கோடீஸ்வர வேட்பாளர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த 299 பேருக்கு குறைந்தது ரூ.1 கோடிக்கும் அதிகமாக சொத்து உள்ளது. இதில் 111 வேட்பாளர்கள் ரூ.5 கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ளனர். 84 வேட்பாளர்கள் ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை சொத்துகளை வைத்துள்ளனர்.
224 வேட்பாளர்கள் ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரையில் சொத்தும், 257 பேர் ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையில் சொத்தும், 228 வேட்பாளர்கள் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான மதிப்பில் சொத்தும் வைத்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிடும் 328 வேட்பாளர்களில் 102 பேர் கோடீஸ்வரர்கள். உத்தரபிரதேசத்தில் 55 கோடீஸ்வர வேட்பாளர்களும், பிஹாரில் 50 கோடீஸ்வரர்களும், மேற்கு வங்கத்தில் 31 கோடீஸ்வர வேட்பாளர்களும், இமாச்சல பிரதேசத்தில் 23 கோடீஸ்வர வேட்பாளர்களும், சண்டிகர், ஜார்க்கண்ட், ஒடிசாஆகிய மாநிலங்களில் தலா 9 கோடீஸ்வர வேட்பாளர்களும் உள்ளனர்.
கட்சி வாரியாகப் பார்த்தால்பாஜகவைச் சேர்ந்த 44 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்களாக உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காங்கிரஸில் 30பேரும், பகுஜன் சமாஜ்கட்சியில் 22 பேரும், சிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி), ஆம் ஆத்மியில் தலா 13 பேரும் கோடீஸ்வரர்களாக உள்ளனர்.
7-வது கட்ட மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் அதிக அளவில் சொத்து வைத்திருப்பது முன்னாள் மத்திய அமைச்சரும், பஞ்சாபின் பதிண்டா தொகுதியில் போட்டியிடுபவருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெயரில் ரூ.198 கோடிக்கு சொத்து உள்ளது. இவர் பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதற்கடுத்தபடியாக ஒடிசாவின் கேந்திரபரா தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பைஜயந்த் பாண்டா ரூ.148 கோடிக்கு சொத்துவைத்துள்ளார். சண்டிகரைச் சேர்ந்த சஞ்சய்டாண்டனுக்கு ரூ.111 கோடியும், இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் விக்ரமாதித்யசிங்குக்கு ரூ.100 கோடியும், நடிகையும், பாஜக சார்பில் மண்டி தொகுதியில் போட்டியிடுபவருமான கங்கனா ரனாவத்துக்கு ரூ.91 கோடியும் சொத்து உள்ளது.
கடைசிகட்ட தேர்தல் வேட்பாளர்களில் மிகவும் குறைந்த சொத்து கொண்டவராக ஒடிசாவைச் சேர்ந்த பானுமதி தாஸுக்கு வெறும் ரூ.1,500 மதிப்பு கொண்ட சொத்துமட்டுமே உள்ளது. இவர் ஜெகத்சிங்பூரில் (தனிதொகுதி) போட்டியிடுகிறார்.
லூதியாணாவைச் சேர்ந்த ராஜீவ் குமார் மெஹ்ராவுக்கு ரூ.2,500 மதிப்புள்ள சொத்து மட்டுமே உள்ளது. இதேபோல், பலராம் மண்டல் (ஜாதவ்பூர்), ஸ்வபன் தாஸ் (கொல் கத்தா வடக்கு), கனியா லால் (லூதியாணா) ஆகிய வேட்பாளர்களுக்கு தலா ரூ.2,500 முதல் ரூ.3,100 மதிப்புள்ள சொத்துகள் மட்டுமே உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT