Published : 30 May 2024 05:05 AM
Last Updated : 30 May 2024 05:05 AM

சீன படையெடுப்பு பற்றி சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் மணி சங்கர் ஐயர்

மணி சங்கர் ஐயர்

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘கடந்த 1962-ம் ஆண்டு இந்தியா மீது சீனா படையெடுத்ததாக குற்றம்சாட்டப்படுகிறது’’ என்று குறிப்பிட்டார். அதற்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தியா மீது சீனா படையெடுத்தது என்று நேரடியாக சொல்லாமல், படையெடுத்ததாக குற்றம் சாட்டப்படுகிறது என்று அவர் பேசினார். அப்படியானால், இந்தியா மீது சீனா கடந்த 1962-ம்ஆண்டு படையெடுக்கவில்லை என்ற பொருளில் அவர் பேசியதாக பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மணி சங்கர் கூறும்போது, ‘‘சீனா படையெடுப்பு என்று சொல்வதற்கு தவறுதலாக ‘குற்றம் சாட்டப்படுகிறது’ என்ற சொல்லை கூறிவிட்டேன். அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’’ என்றார்.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் அமித் மால்வியா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில்வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்க கோரிக்கை எழுந்த போது, அதை சீனாவுக்காக முன்னாள் பிரதமர் நேரு விட்டுக் கொடுத்தார். அதன்பிறகு சீனாவுடன் ராகுல் காந்தி ரகசிய ஒப்பந்தம் மேற்கொண்டார். சீன தூதரகத்திடம் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளை பணம் பெற்றுக்கொண்டு சீனா மார்க்கெட்டுக்கு ஆதரவாக கட்டுரைகளை வெளியிட்டது.

அதன் அடிப்படையில் பிறகுசீனப் பொருட்களை இந்திய சந்தையில் தாராளமாக அனுமதித்தார் சோனியா காந்தி. இதனால் இந்திய சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தற்போது, சீன படையெடுப்பை வரலாற்றில் இருந்து நீக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் ஐயர் பேசியிருக்கிறார். இந்தியாவின் 38 ஆயிரம் சதுர கி.மீ. நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துள்ளதை தனது பேச்சின் மூலம் மறைக்கப் பார்க்கிறார் மணி சங்கர் ஐயர்.

இவ்வாறு அமித் மால்வியா கண்டனம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ்பக்கத்தில் கூறும்போது, ‘‘மணிசங்கர் ஐயர் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார். அவருடைய கருத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் தொடர்பு இல்லை. கடந்த 1962-ம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதி இந்தியா மீது சீனா படையெடுத்தது உண்மை.அதேபோல் கடந்த 2020-ம் ஆண்டுமே மாதம் லடாக்கில் சீனா ஊடுவியதும் அப்போது 20 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்ததும் உண்மை’’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x