Published : 30 May 2024 05:20 AM
Last Updated : 30 May 2024 05:20 AM

‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது: பிரதமர் மோடி பேச்சு

மேற்கு வங்க மாநிலம் மதுராபூரில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு கூடியிருந்த தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி: ‘காந்தி’ திரைப்படம் மூலம்தான் மகாத்மா காந்தி பற்றி உலகம் தெரிந்துகொண்டது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

மக்களவை இறுதி கட்ட தேர்தல் வரும் ஜூன் 1-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், தனியார் செய்திச் சேனல் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:

மகாத்மா காந்தி மிகவும் புகழ் பெற்ற மனிதர். நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிந்த நிலையில் மகாத்மா காந்தியைப் பற்றி உலகத்துக்கு தெரிவித்திருக்க வேண்டியது நமது பொறுப்பு அல்லவா? ஆனால், உலக நாடுகளுக்கு அவரைப் பற்றி அவ்வளவாக தெரியவில்லை. மன்னிக்கவும். காந்தி திரைப்படம் வெளியான பிறகுதான் அவரைப் பற்றி உலக நாடுகளுக்கு தெரியவந்தது. அந்தப் படத்தை நாம் தயாரிக்கவில்லை.

மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவைப் பற்றி உலகம் நன்கு அறிந்திருந்த நிலையில், மகாத்மா காந்தி அவர்களுக்கு சளைத்தவர் அல்ல. இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். உலகத்தை சுற்றி வந்த பிறகு இதைச் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

ஜெய்ராம் ரமேஷ் கண்டனம்: இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எக்ஸ் சமூக வலைதள பக்தத்தில், “காந்தி திரைப்படம் வெளியான 1982-ம் ஆண்டுக்கு முன்பு மகாத்மா காந்தியைப் பற்றி உலகத்துக்கு தெரியாது என பிரதமர் கூறி உள்ளார். இதன்மூலம் மகாத்மா காந்தியின் புகழுக்கு பிரதமர் மோடி களங்கம் கற்பித்திருக்கிறார். வாராணசி, டெல்லி மற்றும் அகமதாபாத்தில் உள்ள காந்திய அமைப்புகளை அழித்தது பிரதமர் மோடி தலைமையிலான அரசுதான். காந்தியின்தேசியவாதத்தை ஆர்எஸ்எஸ் காரர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் இது உணர்த்து கிறது. அவர்களுடைய சித்தாந்தம் உருவாக்கிய சூழல்தான் நாதுராம் கோட்சே மூலம் காந்தியை படுகொலை செய்ய வழிவகுத்தது” என பதிவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் பேசும்போது அவருடைய கை லேசாக நடுங்கியது. இது தொடர்பான வீடியோ வைரலாக பரவியது.

இதுகுறித்து ஒடிசா மாநிலம் பாரிபடா நகரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிபேசும்போது, “நவீன் பட்நாயக் பற்றி அவரது நலம் விரும்பிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த ஓராண்டில் நவீன்பட்நாயக்குக்கு நெருக்கமானவர்கள் என்னை சந்தித்து பேசிய போதெல்லாம், அவருடைய உடல்நலம் குறித்த தகவலை பகிர்ந்து கொண்டனர். இப்போதெல்லாம் அவரால் சுயமாக எதுவும் செய்ய முடியவில்லை என அவர்கள் தெரிவித்தனர். அவருடைய உடல்நலம் குன்றியதற்கு ஏதேனும் சதி இருக்கலாம் என அவர்கள் சந்தேகிக்கின்றனர். ஒடிசாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், நவீன் பட்நாயக்கின் உடல்நலம் குன்றியதற்கான காரணம் வெளிக் கொண்டுவரப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x