Published : 30 May 2024 04:40 AM
Last Updated : 30 May 2024 04:40 AM

57 தொகுதிகளில் பிரச்சாரம் இன்று ஓய்கிறது: ஜூன் 1-ல் இறுதிகட்ட தேர்தல்

புதுடெல்லி: நாடு முழுவதும் இறுதி மற்றும் 7-ம் கட்டமாக 57 தொகுதிகளில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று ஓய்கிறது. இதையடுத்து அரசியல் தலைவர்கள் இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில், 6 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில், 7-வதுமற்றும் இறுதி கட்டமாக 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள57 தொகுதிகளில் ஜூன் 1-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9, பிஹார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3 மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் 1 தொகுதியில் இத்தேர்தல் நடைபெறுகிறது. பிரச்சாரத்துக்கான அவகாசம் இன்று மாலையுடன் முடிவதால், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய வேட்பாளர்கள்: கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பிரதமர் மோடி, அதே தொகுதியில் 3-வது முறையாக பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் மகன் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் நடிகர் ரவி கிஷண் (பாஜக), இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் (பாஜக), மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்) என மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x