Last Updated : 29 May, 2024 09:43 PM

1  

Published : 29 May 2024 09:43 PM
Last Updated : 29 May 2024 09:43 PM

ராமர் கோயிலால் சரிவிகிதத்தில் சாதக, பாதகம்: ஃபைசாபாத் தொகுதியை பாஜக மீண்டும் வெல்லுமா?

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் ஆதரவை ராமர் கோயில் பெற்று தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆனால், ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள அயோத்தி பகுதி ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொகுதிக்கான வாக்குப்பதிவு கடந்த மே 20-ம் தேதி நிறைவடைந்தது. இங்கு மீண்டும் பாஜக வெல்லுமா? அதற்கான வாய்ப்புகள் என்ன?

தொகுதி நிலவரம் என்ன? - உத்தரப் பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 மக்களவைத் தொகுதிகள் இருக்கின்றன. இதில் ஃபைசாபாத் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதைப் பலரும் உற்று நோக்கி வருகின்றனர். சாதாரண தொகுதியாக இருந்தது இத்தனை புகழ் வெளிச்சத்துக்கு வரக் காரணம் அங்கு கட்டப்பட்ட ராமர் கோயில்தான்.

ஃபைசாபாத்தும் ராமர் கோயிலும்! - இரண்டாவது முறையாக பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்ததும் 2019-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், 2020-ம் ஆண்டு ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் நரேந்திர மோடி. கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக தொடர்ந்த அந்தக் கட்டிட பணிகள் 2024-ம் ஆண்டு முடிக்கப்பட்டு ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. சரியாக, தேர்தல் நெருங்கும் வேளையில் திறக்கப்பட்ட இந்தக் கோயிலால் பாஜக இந்துக்கள் வாக்குகளை ஒருங்கிணைக்கும் எனக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

பாஜக எண்ணம் பலிக்குமா? - பாஜகவைச் சேர்ந்த லாலுசிங் தான் 2014-ம் ஆண்டு தொடங்கி இந்தத் தொகுதியின் எம்பியாக இருக்கிறார். இந்த முறையும் அவர்தான் அக்கட்சி சார்பாகக் களம் காணுகிறார். 2014-ம் ஆண்டு போட்டியிட்ட போது 4,91,663 வாக்குகள் பெற்று சுமார் 2,82,698 வாக்கு வித்தியாசத்தில் வென்றார். ஆனால், 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் லாலு சிங் 5,29,021 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்தார். இரண்டாவது இடத்தை 4,63,544 வாக்குகள் பெற்று சமாஜ்வாதி கட்சி பிடித்தது. இதில் 64,926 வாக்கு வித்தியாசத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இம்முறை மீண்டும் பாஜக சார்பாக லாலு சிங் களமிறங்குகிறார். சமாஜ்வாதி கட்சி சார்பாக ஆவாதேஷ் பிரசாத் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக சச்சிதானந்த் பாண்டே ஆகியோர் களத்தில் போட்டியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இத்தொகுதியில் மீண்டும் வெற்றியைப் பதிவு செய்யவேண்டும் என்னும் குறிக்கோளுடன் இருக்கிறது பாஜக. சென்ற முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் பாஜக வென்றது. எனவே, இம்முறை போட்டி கடுமையாக இருக்கும் என்பதை உணர்ந்தே, கடந்த 6 மாதங்களில் 3 முறை அயோத்திக்கு வந்தார் பிரதமர் நரேந்திர மோடி. அதுமட்டுமில்லாமல் யோகி ஆதித்தநாத்தும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார்.

ராமர் கோயில் அமைக்கப்பட்டதன் காரணமாக அப்பகுதி மக்களின் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும், நிலத்தின் விலை மற்றும் மக்களின் வாழ்வாதாரமும் ஏற்றம் கண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆகவே, இந்த மாற்றத்தின் காரணமாக உள்ளூர் மக்களின் வாக்குகளைப் பெற முடியும் என உறுதியாக நம்புகிறது பாஜக. அதனால்தான், உ.பி.-க்கு வரும்போதெல்லாம் பொதுக் கூட்டத்தில் ,”காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துவிடும்” எனப் பிரச்சாரம் செய்கிறார் மோடி. இத்தனை ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவதாகப் பிரச்சாரம் செய்தார். தற்போது, கட்டிய பிறகு காங்கிரஸ் இடித்துவிடும் எனப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்.

ஆனால், இந்தப் பிரச்சாரங்கள் பாஜகவை இந்தத் தொகுதியில் மீண்டும் வெல்ல வைக்குமா என்னும் கேள்விகள் முன்வைக்கப்படுகிறது. காரணம், ராமர் கோயில் கட்டி எழுப்பிய பின்னர், அயோத்தி பகுதியில் மட்டும் ரூ.32,000 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளைத் தொடக்கியது பாஜக தலைமையிலான மாநில அரசு. குறிப்பாக, ரயில் வசதி, விமான நிலையம், வீடு , உள்கட்டமைப்பு என அயோத்தி மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஒரு சிறிய நகரத்தையே உருவாக்க திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், இந்தத் திட்டங்களுக்கு மக்களிடம் இருந்து பெறப்பட்ட நிலங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்காதது, நிலங்கள் கட்டாயமாக எடுக்கப்பட்டது என பல குற்றச்சாட்டுகளும் அதிருப்தியும் பாஜக மீது எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் தொகுதியில் குறிப்பிடத்தக்க அளவில் இஸ்லாமியர்களும் வசிக்கின்றனர். உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி பள்ளிவாசல் கட்டி தராததும் அம்மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும், அதையும் கடந்து 10 ஆண்டுகளில் தொகுதியில் அடிப்படை வசதிகள் தொடங்கி, வேலைவாய்ப்பின்மை எனப் பல பிரச்சினைகள் தொகுதியில் நிலவுகிறது. ஆகவே, பெருவாரியான இஸ்லாமிய மற்றும் இந்துக்கள் வாக்குகளும் கூட பாஜகவுக்கு எதிரான மாறும் எனக் கணிக்கப்படுகிறது.

ராமர் கோயில்தான் தங்களுக்கு வாக்குகளைப் பெற்று தரும் என முழுமையாக நம்புகிறது பாஜக. ஆனால், அதே அம்சம்தான் பாஜகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கருத்துகள் சொல்லப்படுகிறது. இந்தத் தொகுதியில் நிலவும் அதிருப்தி பல தொகுதிகளில் பிரதிபலிக்கும் என எதிர்க்கட்சி நம்புகிறது. அதனால்தான் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைப் பிடிக்காது எனப் பிரச்சாரம் செய்து வருகிறது.

குறிப்பாக, முதல் நான்கு கட்ட தேர்தலிலும் களம் பாஜகவுக்குச் சாதகமாக இருந்ததாகக் கணிக்கப்பட்டது. ஆனால், மே 20-ம் தேதி ஃபைசாபாத் தொகுதி உட்பட 5-வது கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு முடிந்த நிலையில்தான் பாஜக ஆட்சியை மீண்டும் பிடிக்குமா என்னும் கேள்வியே எழத் தொடங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே, ராமர் கோயில் திறப்பு பாஜகவுக்கு அந்தத் தொகுதியில் ஆதரவையும் எதிர்ப்பையும் சம்பாதித்துள்ளது. ஆனால், அதில் ஆதரவு சதவீதம் அதிகமா, எதிர்ப்பின் சதவீதம் அதிகமா என்பது தேர்தல் முடிவில் தெரிந்துவிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x