Published : 29 May 2024 03:53 PM
Last Updated : 29 May 2024 03:53 PM

பிரிஜ் பூஷண் சிங் மகனின் கார் மோதி இருவர் உயிரிழப்பு @ உ.பி

கைசரகஞ்ச்: உத்தரப் பிரதேசத்தின் கைசரகஞ்ச் தொகுதியின் பாஜக வேட்பாளர் கரண் பூஷண் சிங் கார் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கரண் பூஷண் சிங் கான்வாய் சென்றபோது கார் மோதியதில் விபத்து நிகழ்ந்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பிரிஜ் பூஷண் சிங்கின் மகன் இந்த கரண். கைசரகஞ்ச் தொகுதியில் இருந்து ஆறு முறை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரிஜ் பூஷண். இந்த நிலையில்தான் மல்யுத்த வீராங்கணைகளின் பாலியல் குற்றச்சாட்டு காரணமாக அவருக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்குப் பதிலாக அவரின் மகன் கரண் பூஷண் சிங்கை பாஜக வேட்பாளராக அறிவித்தது.

கைசர்கஞ்ச் தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள பிரிஜ் பூஷணின் இளைய மகன்தான் கரண் பூஷண் சிங். இவர் தற்போது உத்தரப் பிரதேச மாநில மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். அதேபோல், கோண்டாவின் நவாப்கஞ்சின் கூட்டுறவு கிராம வளர்ச்சி வங்கியின் தலைவராகவும் உள்ளார்.

இந்தநிலையில், இன்று கோண்டா பகுதியில் கரண் பூஷண் சிங்கின் எஸ்யூவி கார் எதிரே வந்த பைக்கில் மோதியதில் 17 வயது சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவருமே சகோதரர்கள். இதையடுத்து உயிரிழந்தவர்களின் தயார் சந்தா பேகம் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் பதியப்பட்டுள்ள எப்ஐஆரில், "17 வயதான ரெஹன் மற்றும் 24 வயதான செஷாத் ஆகியோர் மருந்து வாங்க தங்களது பைக்கில் சென்றுகொண்டிருந்த போது, எதிரே அதிவேகத்தில் வந்த எஸ்யூவி கார் பைக்கில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மேலும் 60 வயது பெண்மணி ஒருவரும் இந்த விபத்தில் காயமடைந்துள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரின் டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் விபத்தின்போது கரண் பூஷண் சிங் காரில் இருந்தாரா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கரண் பூஷண் சிங் கான்வாய் அந்த வழியாகச் சென்றபோது இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதற்கிடையே, விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x