Published : 29 May 2024 05:34 AM
Last Updated : 29 May 2024 05:34 AM

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பப்புவா நியூ கினியாவுக்கு இந்தியா ரூ.8 கோடி நிவாரணம்

புதுடெல்லி: பப்புவா நியூ கினியாவின் எங்கா மாகாணத்தில் கடந்த 24-ம் தேதிபயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை 650 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பப்புவா நியூ கினியாவின் நிவாரணப்பணிக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8 கோடியே 30 லட்சம் ) வழங்குவதாக இந்தியா அறிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தியில், ‘‘இந்தோ-பசிபிக் தீவுகள் கூட்டமைப்பில் பப்புவா நியூகினியா இந்தியாவின் நட்பு நாடு.அந்நாட்டில் ஏற்பட்டுள்ள சோக சம்பவத்துக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் 1 மில்லியன் டாலர்உதவியை மத்திய அரசு அறிவித்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

இயற்கை பேரிடர் நிகழும்போதெல்லாம் பப்புவா நியூகினியாவுக்கு இந்தியா உதவியுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், 2019 மற்றும் 2023-ல் எரிமலை வெடித்தபோதும் பப்புவா நியூகினியாவுக்கு இந்தியா உதவியுள்ளது.

எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி நேற்று விடுத்துள்ள செய்தியில், ‘‘பப்புவா நியூகினியாவில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் ஏற்பட்ட உயிரிழப்பும், சேதமும் மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு இந்தியாவின் சார்பில் இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள். பப்புவா நியூகினியாவுக்கு முடிந்த உதவியை செய்யஇந்தியா தயாராக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x