Published : 28 May 2024 03:11 PM
Last Updated : 28 May 2024 03:11 PM
தும்கா(ஜார்க்கண்ட்): மீண்டும் ஊழல் செய்யவே இந்த தேர்தலில் இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
ஜார்க்கண்ட்டின் தும்கா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய நரேந்திர மோடி, “கடந்த 2014ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது நீங்கள் என்னை ஆசீர்வதித்தீர்கள். நான் பிரதமரானேன். அப்போது காங்கிரஸின் தவறான ஆட்சியால் நாடு சோர்ந்து போயிருந்தது. ஒவ்வொரு நாளும் ஊழல்கள் நடந்தன. ஏழைகளின் பெயரில் பணத்தைக் கொள்ளையடிப்பதில் காங்கிரஸ் கட்சி இடைவிடாது ஈடுபட்டது. அவற்றையெல்லாம் நான் தடுத்து நிறுத்தினேன்.
பொதுமக்களின் பணம் இன்று மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படுகிறது. கிராமங்கள், ஏழைகள், தலித்துகள், பழங்குடியின குடும்பங்கள் இதன் மூலம் அதிகம் பயனடைந்துள்ளன. நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் குரல்களை முந்தைய அரசுகள் கேட்காத நிலையில், நாங்கள் அவர்களின் வாழ்க்கையை மாற்றினோம், அவர்களின் பிரச்சினைகளை தீர்த்தோம்.
கடந்த 10 ஆண்டுகளில் செய்த பணிகளை அடுத்த 5 ஆண்டுகளில் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் 3 கோடி தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை லட்சாதிபதி ஆக்குவதே எனது உறுதி. ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு புதிய அரசு அமையும். ஆட்சி அமைத்த பிறகு ஏழைகளுக்கு மேலும் 3 கோடி வீடுகள் கட்டித் தரப்படும்.
ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி ஆகியவை வெளிப்படையாக வெட்கமின்றி மிரட்டுகின்றன. மோடியை நீக்கிவிட்டால் மீண்டும் ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஊழல் செய்யவே இண்டியா கூட்டணி வாய்ப்பு கேட்கிறது. நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், மோசடிகள் நடக்க அனுமதிப்பீர்களா?
தற்போது ஜார்கண்டில் ஊடுருவல்காரர்களால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில், பழங்குடியினரின் எண்ணிக்கை வேகமாக குறைந்து, ஊடுருவும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பழங்குடியினரின் நிலங்கள் ஊடுருவல்காரர்களால் கையகப்படுத்தப்படுகிறதா இல்லையா? இண்டியா கூட்டணி மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குகிறார்கள். மோடி உயிருடன் இருக்கும் வரை பழங்குடியினர், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை உங்களால் பறிக்க முடியாது என்பதை இந்திய கூட்டணி மக்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT