Published : 28 May 2024 01:23 PM
Last Updated : 28 May 2024 01:23 PM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியை அளித்து வருகிறது என்றும், இது இரு தரப்புக்கும் நெருக்கமான போட்டி என்பதில் சந்தேகம் இல்லை என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சல்மான் குர்ஷித், “400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று அமித் ஷா தொடர்ந்து கூறி வருகிறார். தற்போதைய சூழலில் அவரால் அப்படித்தான் கூற முடியும். அவர்கள் முதலில் குறிப்பிட்ட ஒரு எண்ணைவிட(400+) குறைத்து சொல்ல அவர்களால் முடியாது. எனவே அவர்கள் அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் யாருக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும். எனவே, சற்று பொறுத்திருப்போம். காங்கிரஸ் இத்தனை இடங்களில் வெற்றி பெறும் என்று நாங்கள் குறிப்பிடலாம். ஆனால் அத்தனை இடங்களில் வெற்றி கிட்டுமா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதேநேரத்தில், மக்கள் சொல்வதைக் கேட்பதிலிருந்தும், தொழிலாளர்கள் சொல்வதைக் கேட்பதிலிருந்தும், எங்கள் தலைவர்களின் உடல் மொழியைக் கவனிப்பதில் இருந்தும், ஒரு விஷயத்தை என்னால் சொல்ல முடியும். அவர்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
கடந்த இரண்டு மக்களவைத் தேர்தல்களோடு ஒப்பிடும்போது, இந்தத் தேர்தலில் நாங்கள் இன்னும் நன்றாகப் போராடி இருக்கிறோம். காங்கிரஸ் கடும் போட்டியை அளித்திருக்கிறது. இரு தரப்புக்கும் இது ஒரு நெருக்கமான போட்டி என்பதில் சந்தேகமில்லை.
வறுமை, வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்சினைகள், தேர்வுத்தாள் கசிவுகள் என பல்வேறு பிரச்சினைகளை மக்களிடம் கொண்டு செல்வதில் ராகுல் காந்தி வெற்றி பெற்றிருக்கிறார். பல தலைப்புகளில் அவர் மிகவும் துல்லியமாக உரையாற்றி இருக்கிறார். அவரது கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதோடு, காங்கிரஸ் கட்சியின் உத்தரவாதத்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். நரேந்திர மோடி தலைமையிலான கடந்த 10 ஆணடு கால ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எல்லா பிரச்சினைகளும் அதிகரித்துவிட்டதாகவும், மாற்றம் வர வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகிறார்கள்.
நாங்கள் விரும்பும் அளவுக்கு மாற்றத்திற்கான சாத்தியக்கூறு உள்ளதா, எங்களால் ஆட்சி அமைக்க முடியுமா? என்பதையெல்லாம் கவனமாக பரிசீலித்த பின்னரே எதுவும் கூற முடியும். இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெற வேண்டியுள்ளது. முதலில் தேர்தல் முடியட்டும். பிறகு நாம் ஏதாவது சொல்லலாம். தற்போதைய நிலையில், கட்சியின் உற்சாகம், தொண்டர்களின் அர்ப்பணிப்பு போன்றவற்றைப் பார்க்கும்போது, ஆட்சிக்கு வரும் தருவாயில் நாங்கள் இருப்பதாகவே நான் நம்புகிறேன். நாங்கள் நல்ல அரசாங்கத்தை அமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT