Published : 28 May 2024 11:12 AM
Last Updated : 28 May 2024 11:12 AM

“ஒடிசாவின் எதிர்காலம் முக்கியம்” - நவீன் பட்நாயக் உடனான உறவு குறித்து பிரதமர் மோடி

புரி ஜெகந்நாதர் கோயிலில் பிரதமர் மோடி

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் அதன் கடைசி கட்டத்தை நெருங்கியுள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (ஜுன் 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்நிலையில், மீண்டும் பாஜக ஆட்சி மத்தியில் அமையும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஒடிசா மாநிலத்திலும் தங்கள் கட்சி தான் ஆட்சி அமைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் அவர் பகிர்ந்து கொண்டது குறித்து பார்ப்போம். இதில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் குறித்தும் பேசியுள்ளார். ஓடிசாவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே நேரத்தில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பேசியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் நட்பு ரீதியிலான உறவை நாங்கள் பின்பற்றி வருகிறோம். ஜனநாயக நாட்டில் பகை என்பதற்கு இடம் இல்லை. இப்படி இருக்கும் சூழலில் நான் ஒடிசாவின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதா அல்லது நவீன் பட்நாயக் உடனான உறவு முக்கியமா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது.

எனக்கு ஒடிசாவின் எதிர்காலம் தான் முக்கியம். அதற்காக நான் சில தியாகங்களை செய்ய வேண்டி இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைவரையும் நான் சமாதானம் செய்வேன். இங்கு எனக்கு யாருடனும் பகை என்பது கிடையாது.

கடந்த 25 ஆண்டு காலமாக ஒடிசாவில் எந்தவித முன்னேற்றமும் இல்லை. ஒட்டுமொத்த சிஸ்டத்தையும் ஒரு குழு தனது கைகளில் வைத்து உள்ளது. அதன் பிடியில் இருந்து ஒடிசா வெளிவந்தால் வளர்ச்சிப் பாதையை எட்டும்.

இயற்கை வளங்கள் அதிகம் கொண்ட மாநிலம். அந்த மாநிலத்தின் மக்கள் வறுமையில் வாடுவதை பார்த்து எனது மனம் வருந்துகிறது. இதற்கு மாநிலத்தில் ஆட்சியில் உள்ள அரசு தான் காரணம். அந்த மாநிலத்தின் அடையாளம் மற்றும் மக்கள் தங்களது உரிமையை அவசியம் பெற வேண்டும்.

ஒடிசாவின் தலையெழுத்து மாறும். ஆட்சி மாற்றம் நிகழும். தற்போது ஆட்சியில் உள்ளவர்களின் ஆட்சி காலம் ஜுன் 4-ம் தேதியுடன் காலாவதி ஆகிவிடும் என நான் சொல்லி இருந்தேன். வரும் ஜுன் 10-ம் தேதி அன்று பாஜக உறுப்பினர் முதல்வராக பொறுப்பு ஏற்பார். இவ்வாறு பிரதமர் தெரிவித்தார்.

மேற்கு வங்கம் குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில். “மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது இருப்பை நிலை நிறுத்த போராடி வருகிறது. அதை நீங்கள் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது பார்த்து இருக்கலாம். மூன்று இடங்கள் என்ற நிலையில் இருந்து 80 இடங்களை பாஜக வென்றது. அதுவே அதற்கு சான்று.

கடந்த மக்களவைத் தேர்தலிலும் மேற்கு வங்கத்தில் எங்களுக்கு பலத்த ஆதரவு இருந்தது. இந்த முறை அதிக இடங்களில் வெற்றியை தருகின்ற மாநிலங்களில் மேற்கு வங்கம் இருக்கும். பாஜக உறுப்பினர்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை திரிணமூல் மேற்கொண்டு வருகிறது. கொலை, கைது என அது நீள்கிறது. இருந்தாலும் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. ஏனெனில், எங்களுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருக்கிறது” என சொல்லியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x